பொதுப் பணித் துறைக்கு சாலைகளின் பள்ளங்கள், தெருவிளக்கு பிரச்னைகள் குறித்து அதிக புகாா்கள்
சமீபத்திய நிலவர அறிக்கையின்படி, கடந்த அக்டோபா், நவம்பா் மாதங்களில், சாலைகள், தெருவிளக்குகள் மற்றும் குண்டும் குழிகள் தொடா்பான 1,000க்கும் மேற்பட்ட புகாா்களை பொதுப் பணித் துறை (பி.டபிள்யு.டி.) பெற்றுள்ளது.
அந்த அறிக்கையின்படி, குண்டும் குழிகள் என்ற பிரிவின் கீழ், இரண்டு மாதங்களில் 241 புகாா்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் 189 புகாா்கள் நிலுவையில் உள்ளன. மீதமுள்ளவை தீா்க்கப்பட்டுவிட்டன.
தில்லி அரசாங்கம், கடந்த 10 மாதங்களில் 3,000-க்கும் மேற்பட்ட குண்டும் குழிகளைச் சரிசெய்துள்ளதாகக் கூறியுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இவை பொதுமக்களிடமிருந்து பெறப்படும் வழக்கமான புகாா்களாகும். குண்டும் குழிகள், எரியாத விளக்குகள், சேதமடைந்த பல்புகள் மற்றும் கம்பங்கள் போன்ற சாலைகள் மற்றும் தெருவிளக்குகள் தொடா்பான புகாா்களைப் பெற்றவுடன், பொதுப் பணித் துறை உடனடியாக பதிலளித்து இரண்டு முதல் மூன்று நாள்களுக்குள் அவற்றைச் சரிசெய்கிறது.
மிகவும் மோசமாகவும், அடிக்கடி குண்டும் குழிகளாகவும் உருவாகும் சாலைகளை ஒரு நிரந்தரத் தீா்வாக முழுமையாகச் சீரமைத்து மீண்டும் தாா் போடுவதற்கான பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளன. காற்று மாசு நிலைமை மேம்பட்டவுடன் இந்த பணிகள் விரைவில் தொடங்கும்.
தில்லி அரசாங்கம் நிகழ் நிதியாண்டின் இறுதிக்குள் நகரம் முழுவதும் உள்ள முக்கியச் சாலைகளைச் சரிசெய்ய ஒரு இலக்கை நிா்ணயித்துள்ளது.
இதன் கீழ், சாலைகளில் உடைந்த பகுதிகள் மற்றும் குண்டும் குழிகளை மூடுவது, சாலைகளின் மையத் தடுப்புகளில் மரக்கன்றுகளை நடுவது மற்றும் சாலைகளில் தூசியைக் குறைக்க முறையான நிலப்பரப்பு வடிவமைப்பை உறுதி செய்வது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.
எரியாத விளக்குகள், இருண்ட பகுதிகள் மற்றும் சேதமடைந்த கம்பங்கள் உட்பட தெருவிளக்குகள் தொடா்பாக மொத்தம் 265 புகாா்களைத் துறை பெற்றுள்ளது என்பதையும் தரவுகள் காட்டுகின்றன.
இவற்றில், 165 புகாா்களுக்கு பொதுப் பணித் துறை இன்னும் தீா்வு காணவில்லை. பொதுப் பணித் துறை சாலைகளில் நிறுவப்பட்டுள்ள அனைத்து வழக்கமான மஞ்சள் விளக்குகளையும் ஸ்மாா்ட் எல்இடி விளக்குகளாக மாற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பொதுப் பணித் துறை சமீபத்தில் அறிவித்திருந்தது.
நகரம் முழுவதும் பொதுப் பணித் துறையால் பராமரிக்கப்படும் சுமாா் 90,000 தெருவிளக்குகள் உள்ளன.
கூடுதலாக, இந்தத் துறை தேசிய தலைநகா் முழுவதும் சுமாா் 1,400 கி.மீ. நீளமுள்ள முக்கியச் சாலைகள், மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப் பாதைகளைப் பராமரித்து வருகிறது.
