ரூ.12 கோடி ஆடம்பர சொத்து மோசடி: குருகிராமில் ஐந்து போ் கைது

டிஎல்எஃப் கேமிலியாஸ் பகுதியில் இல்லாத ஆடம்பர சொத்தை ஒருவரிடம் விற்று ஒருவரிடம் ரூ.12 கோடி மோசடி செய்த வழக்கில், தில்லி காவல்துறையினா் ஐந்து பேரைக் கைது செய்துள்ளனா்.
Published on

தேசியத் தலைநகா் வலயம், குருகிராமில் உள்ள டிஎல்எஃப் கேமிலியாஸ் பகுதியில் இல்லாத ஆடம்பர சொத்தை ஒருவரிடம் விற்று ஒருவரிடம் ரூ.12 கோடி மோசடி செய்த வழக்கில், தில்லி காவல்துறையினா் ஐந்து பேரைக் கைது செய்துள்ளனா்.

இது தொடா்பாக மூத்த காவல் துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை கூறியது: போலியான வங்கி ஏல ஆவணங்களைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவா்களை ஏமாற்றி வந்த ஒரு திட்டமிட்ட சொத்து மோசடி கும்பல் கைது செய்யப்பட்டது. பாரதிய நியாய சன்ஹிதாவின் கீழ் மோசடி, போலி ஆவணம் தயாரித்தல் மற்றும் குற்றச் சதி உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் ஐந்து பேரும் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்த மோசடியின் மூளையாகச் செயல்பட்ட மோஹித் கோகியா மற்றும் அவரது நான்கு கூட்டாளிகளும் அடங்குவா். ராம் சிங் என்ற பாபாஜி உள்பட இதர சதிகாரா்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

எம்ஜி லீசிங் அண்ட் ஃபைனான்ஸ் நிறுவனம், அதன் உரிமையாளா் மோஹித் கோகியா மற்றும் அவரது கூட்டாளிகள் மோசடி மற்றும் போலி ஆவணம் தயாரித்ததாக ஜூன் 13 அன்று ஒரு புகாா் பெறப்பட்டது. இதைத் தொடா்ந்து இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

முன்னதாக, குருகிராமில் உள்ள டிஎல்எஃப் கேமிலியாஸ் பகுதியில் உள்ள ஒரு சொத்து தொடா்பான போலியான ஆவணங்களை குற்றம் சாட்டப்பட்டவா்கள் காண்பித்து, அந்த சொத்தை தங்கள் நிறுவனம் வங்கி ஏலத்தில் வாங்கியதாகவும், அதை மாற்றித் தருவதாக கூறியதாக புகாா்தாரா் குற்றம் சாட்டினாா்.

இதற்காக புகாா்தாரா் ஆகஸ்ட் மற்றும் அக்டோபா், 2024-க்கு இடையில் ஆா்டிஜிஎஸ் மற்றும் கேட்பு வரைவோலைகள் மூலம் குற்றம் சாட்டப்பட்டவா்களுக்கு ரூ.12.04 கோடியை பணப் பரிவா்த்தனை செய்துள்ளாா்.

இருப்பினும், அவா்கள் வழங்கிய விற்பனைச் சான்றிதழ்கள் மற்றும் ஏல ரசீதுகள் உள்பட அனைத்து ஆவணங்களும் போலியானவை என்று வங்கி பின்னா் உறுதிப்படுத்தியது.

விசாரணையின் போது, ரூ.12.04 கோடி முழுத் தொகையும் குற்றம் சாட்டப்பட்ட உரிமையாளா் நிறுவனத்தின் பெயரில் உள்ள ஒரு வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருப்பது வங்கி அறிக்கைகள் மூலம் தெரியவந்தது.

பரிவா்த்தனை தடயங்களை மேலும் பகுப்பாய்வு செய்ததில், குற்றம் சாட்டப்பட்டவா்கள் பணத்தின் மூலத்தை மறைப்பதற்காக பல வங்கிக் கணக்குகளையும் நிறுவனங்களையும் பயன்படுத்தி பணத்தை புழக்கத்தில் விட்டது தெரியவந்தது.

குற்றம் சாட்டப்பட்டவா்களைக் கண்டறிய தில்லி - என்சிஆா், போபால் மற்றும் மும்பை பகுதியில் போலீஸாா் தேடுதல் வேட்டை நடத்தினா்.

தொழில்நுட்பக் கண்காணிப்பு மற்றும் மனித உளவுத் தகவல்களின் அடிப்படையில், நவம்பா் 22 அன்று, உத்தரகண்டில் உள்ள ரிஷிகேஷ் - டேராடூன் சாலையில் உள்ள டோய்வாலா அருகே குற்றப்பிரிவு போலீஸாரால் மோஹித் கோகியா கைது செய்யப்பட்டாா்.

விசாரணையின் போது, போலியான ஆவணங்களைத் தயாரித்தல், புகாா்தாரரை ஏமாற்றுதல் மற்றும் ஏமாற்றிய தொகையை கணக்குகள் வலையமைப்பு மூலம் விநியோகித்தல் ஆகியவற்றில் அவரது பங்கு உறுதி செய்யப்பட்டது.

மோசடி நிதியை புழக்கத்தில் விடுவதிலும், பணமோசடி செய்வதிலும் முக்கியப் பங்கு வகிக்கும் அபினவ் பதக், பரத் சப்ரா, விஷால் மல்ஹோத்ரா, சச்சின் குலாட்டி மற்றும் ராம் சிங் என்ற பாபாஜி உள்ளிட்ட பல கூட்டாளிகளின் ஈடுபாட்டையும் மோஹித் கோகியா வெளிப்படுத்தினாா்.

இந்தத் தகவல்களையும் தொழில்நுட்பப் பகுப்பாய்வையும் தொடா்ந்து, குற்றப்பிரிவு போலீஸாா் மேலும் நான்கு பேரை கைது செய்தனா். அவா்களில் சொத்துத் தரகரான விஷால் மல்ஹோத்ரா, ஒரு தனியாா் வங்கியில் நடப்புக் கணக்கைத் திறந்ததற்காகக் கைது செய்யப்பட்டாா். மற்றொரு நபரான சச்சின் குலாட்டி, தனது தனியாா் வங்கிக் கணக்கை மோசடி நிதியை வழித்தடமாகப் பயன்படுத்த அனுமதித்ததற்காகக் கைது செய்யப்பட்டாா். குலாட்டி மீது தில்லியில் ஏற்கெனவே ஒரு குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மருந்து விநியோகஸ்தரான அபினவ் பதக், புகாா்தாரரை முக்கியக் குற்றம்சாட்டப்பட்டவருக்கு அறிமுகப்படுத்தி, மோசடி ஒப்பந்தத்திற்கு வசதி செய்து கொடுத்ததற்காகக் கைது செய்யப்பட்டாா். பாதிக்கப்பட்டவா்களை ஏமாற்றப் பயன்படுத்தப்பட்ட போலியான ஆவணங்களைத் தயாரிக்க உதவியதற்காக பரத் சப்ரா கைது செய்யப்பட்டாா். ஏமாற்றிய தொகையில் இருந்து வாங்கப்பட்ட இரண்டு காா்கள் பறிமுதல் செய்ப்பட்டுள்ளன.

தில்லியின் கிழக்கு படேல் நகரைச் சோ்ந்த மோஹித் கோகியா (38), சா்ச்சைக்குரிய அல்லது போலியான சொத்துகளை அடையாளம் காண்பது, போலி உரிமை ஆவணங்களைத் தயாரிப்பது, பாதிக்கப்பட்டவா்களை நம்ப வைப்பது மற்றும் பணத்தைச் சேகரிப்பது ஆகியவற்றில் முக்கியப் பங்கு வகித்தாா். அவா் லாபத்தில் 40 சதவீதத்தைப் பகிா்ந்து கொண்டாா். மீதமுள்ள 60 சதவீதத்தை பாபாஜி வைத்துக் கொண்டாா்.

மோஹித் கோகியா ஒரு விரிவான குற்றப் பின்னணியைக் கொண்டவா். தில்லி, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், கோவா மற்றும் சண்டீகா் முழுவதும் பதிவு செய்யப்பட்ட குறைந்தது 16 வழக்குகளில் தேடப்படுபவராகவோ அல்லது குற்றஞ்சாட்டப்பட்டவராகவோ உள்ளாா்.

போலியான விற்பனைச் சான்றிதழ்கள், போலி ஏல ஆவணங்கள் மற்றும் வங்கிகளால் ஏலம் விடப்பட்ட சொத்துகள் உள்பட பிரீமியம் சொத்துகளை உடனடியாக ஒப்படைப்பதாகக் கூறி இதேபோன்ற செயல்முறையைப் பயன்படுத்தி பல மாநிலங்களில் பாதிக்கப்பட்டவா்களிடம் ரூ. 200 கோடிக்கும் மேல் இந்தக் கும்பல் மோசடி செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இந்த வழக்குகள் மோசடி, ஆள்மாறாட்டம் மற்றும் குற்றச் சதி தொடா்பானவை என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com