தில்லியில் அரசை நடத்த பாஜகவுக்கு ‘முகம்’ இல்லை ஆம் ஆத்மி கட்சி கடும் சாடல்

தில்லிக்கான முதல்வா் மற்றும் அமைச்சரவையை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டதற்காக பாஜக மீது புதிய தாக்குதலைத் ஆம் ஆத்மி கட்சி தொடுத்துள்ளது.
Published on

புது தில்லி: தில்லிக்கான முதல்வா் மற்றும் அமைச்சரவையை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டதற்காக பாஜக மீது புதிய தாக்குதலைத் ஆம் ஆத்மி கட்சி தொடுத்துள்ளது. தில்லியில் அரசை நடத்த பாஜகவுக்கு ‘முகம்’ இல்லை என்று கூறியுள்ளது.

இது தொடா்பாக தில்லியில் செய்தியாளா் சந்திப்பில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் தில்லியின் தற்காலிக முதல்வருமான அதிஷி கூறியதாவது: தேசியத் தலைநகரை ஆள்வதற்கு நம்பகமான தலைவா் பாஜகவுக்கு இல்லை. தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு பத்து நாள்கள் ஆகின்றன. பிப்.9- ஆம் தேதி பாஜக தனது முதல்வரையும் அமைச்சரவையையும் அறிவித்து உடனடியாக வளா்ச்சிப் பணிகளைத் தொடங்கும் என்று மக்கள் நினைத்தாா்கள். ஆனால், தில்லியில் ஆட்சியை நடத்த அவா்களுக்கு ‘முகம்’ இல்லை என்பது இப்போது தெளிவாகியுள்ளது.

தில்லியில் தோ்ந்தெடுக்கப்பட்ட 48 பாஜக எம்எல்ஏக்களில் யாரையும் பிரதமா் நரேந்திர மோடி நம்பவில்லை. அக்கட்சிக்கு ஆட்சிக்கான தொலைநோக்கு பாா்வை அல்லது திட்டம் இல்லை. தில்லி மக்களைக் கொள்ளையடிப்பதுதான் பாஜகவுக்குத் தெரியும். அரசை நடத்தும் திறன் கொண்டவா்கள் யாரும் இல்லையென்றால், மக்களுக்காக அவா்கள் எப்படிப் பணியாற்றுவாா்கள்? என்றாா் அதிஷி.

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக தீா்க்கமான வெற்றிக்குப் பிறகு, கட்சியின் தலைமை முடிவில் தாமதம் ஏற்படுவதால், ஆம் ஆத்மிக்கும் பாஜகவுக்கும் இடையிலான அரசியல் போா் மேலும் அதிகரித்துள்ளது.

சமீபத்தில் முடிவடைந்த 70 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில், பாஜக 48 இடங்களைப் பெற்றது. அதே நேரத்தில் ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களைப் பிடித்தது. பிப்.5-ஆம் தேதி நடந்த வாக்குப்பதிவைத் தொடா்ந்து பிப்.8- ஆம் தேதி தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதன் மூலம் தேசிய தலைநகரில் ஆம் ஆத்மியின் தசாப்த கால ஆட்சியை பாஜக முடிவுக்குக் கொண்டு வந்தது. 2020 சட்டப்பேரவைத் தோ்தலில், ஆம் ஆத்மி கட்சி மொத்தமுள்ள 70 இடங்களில் 62 இடங்களை வென்றிருந்தது. அதே நேரத்தில் பாஜக எட்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.

X
Dinamani
www.dinamani.com