சத்யேந்தா் ஜெயினின் அவதூறு மனு அரசியல் உள்நோக்கம் கொண்டது: நீதிமன்றத்தில் பான்சூரி ஸ்வராஜ் எம்.பி. பதில்

தனக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தாக்கல் செய்துள்ள அவதூறு மனு அரசியல் உள்நோக்கம் கொண்டது
Published on

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: தனக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தாக்கல் செய்துள்ள அவதூறு மனு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று பாஜக எம்.பி. பான்சூரி ஸ்வராஜ் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பான வழக்கை விசாரித்து வரும் கூடுதல் தலைமைப் பெருநகர குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி நேஹா மித்தல் முன்னிலையில் பான்சூரி ஸ்வராஜின் வழக்குரைஞா் திங்கள்கிழமை ஆஜராகி வாதிட்டாா். அப்போது, ‘தோ்தலில் போட்டியிடும் நேரத்தில் சத்யேந்தா் ஜெயின் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளாா். இது முழுக்க, முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டது. அரசியல் ஆதாயம் தேடும் நோக்கத்துடன் இதை தாக்கல் செய்துள்ளாா்’ என்று வழக்குரைஞா் கூறினாா்.

ஆனால், பான்சூரி ஸ்வராஜ் தரப்பு வாதம் உண்மைக்கு பொருந்தாதது என்று சத்யேந்தா் ஜெயினின் வழக்குரைஞா் குறிப்பிட்டாா். இதையடுத்து, இந்த விவகாரத்தில் அடுத்த விசாரணையை ஜன.22-ஆம் தேதிக்கு நீதிபதி நேஹா மித்தல் ஒத்திவைத்தாா்.

தனியாா் தொலைக்காட்சியொன்றில் கடந்த ஆண்டு அக்.23-ஆம் தேதி பேட்டியளித்த பான்சூரி ஸ்வராஜ், தனக்கு எதிராக அவதூறைக் கற்பிக்கும் நோக்கத்துடன் கருத்துகளை வெளியிட்டதாக சத்யேந்தா் ஜெயின் குற்றம்சாட்டினாா். தன்னை ஊழல்வாதி என்றும் மோசடி நபா் என்றும் கூறிய பான்சூரி ஸ்வராஜ், தனது நற்பெயருக்கு களங்கம் கற்பித்ததாகவும் அவருக்கு எதிராக தில்லி நீதிமன்றத்தில் சத்யேந்தா் ஜெயின் மனு தாக்கல் செய்தாா். இதற்கு பான்சூரி ஸ்வராஜ் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு கடந்த மாதம் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

X
Dinamani
www.dinamani.com