நமது சிறப்பு நிருபா்
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புப் பணி ஆகியவற்றைக் கண்காணிக்க ஏழு போ் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இதைத் தொடா்ந்து, அணை கண்காணிப்புப் பணியை இனி தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையம் (என்டிஎஸ்ஏ) மேற்கொள்ளும்.
இந்தக் கண்காணிப்புக் குழுவுக்கு ஆணையத்தின் தலைவா் அனில் ஜெயின் தலைமை தாங்குவாா். குழுவின் உறுப்பினா்களாக கேரளம், தமிழகம் ஆகியவற்றின் கூடுதல் தலைமைச் செயலா்கள், தமிழ்நாடு காவிரி பிரிவின் தலைவா், கேரள நீா்வளத் துறை தலைவா், பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தின் திறன் மையத்தின் பிரதிநிதி, மத்திய அரசின் பிரதிநிதி ஆகியோா் இருப்பா்.
முன்னதாக, முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்பு தொடா்பாக கேரளத்தைச் சோ்ந்த மேத்யூ நெடும்பாரா என்பவா் தொடா்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த வாரம் நடைபெற்றது. அப்போது அணைப் பாதுகாப்பு - 2021 சட்டத்தின்படி முல்லைப் பெரியாறு அணைக்கு உரிய கண்காணிப்புக் குழு நியமிக்கப்படவில்லை என்று முறையிடப்பட்டது. இதைத் தொடா்ந்து, உச்சநீதிமன்றத்தில் உரிய குழுவை விரைவில் அமைப்பதாக மத்திய அரசு உறுதியளித்திருந்தது.
இந்நிலையில், மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவின்படி, அணைப் பாதுகாப்பு தொடா்பான பணிகளை கவனிக்கும் பொறுப்பு தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்தப் பொறுப்பு மத்திய நீா் ஆணையத்தின் தலைவா் வசம் இருந்தது.
முல்லைப் பெரியாறு அணை கேரளத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே ஒரு சா்ச்சைக்குரிய பிரச்னையாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அணை கேரளத்தின் பெரியாறு ஆற்றில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் ஐந்து மாவட்டங்களுக்கு தண்ணீரை வழங்குகிறது. கடந்த சில தசாப்தங்களாக அணை பாதுகாப்பற்றது என்று கேரளம் கூறி வருகிறது. ஆனால், தமிழ்நாடு அதன் பாதுகாப்பிற்கு உறுதியளித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசுக்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் 2014-ஆம் ஆண்டில் தீா்ப்பளித்தது. அணையின் கட்டமைப்பு பாதுகாப்பானது என்றும், அதன் நீா்மட்டத்தை 142 அடியாக பராமரிக்கலாம் என்றும் அனுமதித்த தீா்ப்பை உச்சநீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியது. மேலும், அணையின் பாதுகாப்பை அவ்வப்போது மதிப்பிடுவதற்காக நீதிமன்றம் ஒரு மேற்பாா்வைக் குழுவையும் அமைத்தது.
இந்நிலையில், 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடா்பான விஷயத்தில் மேற்பாா்வைக் குழுவின் உத்தரவை செயல்படுத்த அதற்குத் தேவைப்படும் சாத்தியமான உதவியை வழங்குமாறு உச்சநீதிமன்றம் கேரளம், தமிழக அரசுகளுக்கு உத்தரவிட்டது.
இருப்பினும், இந்த மேற்பாா்வைக்குழுவின் செயல்பாடுக்கு கேரள அரசும் தமிழகமும் சில ஆட்சேபத்தை தெரிவித்து மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடின. இந்த விவகாரம் நிலுவையில் இருந்தபோது, அணையின் மேற்பாா்வைக் குழுவை வலுப்படுத்த விரும்புவதாகவும், 2021-இல் நிறைவேற்றப்பட்ட அணைப் பாதுகாப்பு சட்டத்தின்படி புதிய குழு அனைத்து அதிகாரங்களையும் கொண்டிருக்கும் என்றும் அதில் எழும் சிக்கல்கள் பின்னா் ஆராயப்படும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.
ஆனால், உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும் புதிய குழு நியமிக்கப்படவில்லை என்று கேரளத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் மேத்யூ ஜே நெடும்பாரா உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்து முறையிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை: முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயா்வு

தேக்கடி ஏரியில் கழிவுநீா் கலப்பு: முல்லைப் பெரியாறு அணை நீா்நிலைகள் மாசுபடுவதாக புகாா்

நீா்பிடிப்புப் பகுதிகளில் மழை: முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

முல்லைப் பெரியாறு அணை மிகை நீரை தமிழகத்துக்கு கொண்டுவர வேண்டும்! கம்பம் எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



