கோப்புப்படம்
கோப்புப்படம்

தில்லியில் வெயில்; வரும் நாள்களில் மழை பெய்ய வாய்ப்பு! ஐஎம்டி தகவல்

தேசியத் தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை பகல் முழுவதும் நல்ல வெயில் இருந்தது.
Published on

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை பகல் முழுவதும் நல்ல வெயில் இருந்தது. இந்நிலையில், வரும் நாள்களில் மழை பெய்யும் என்று இந்திய வானிலை துறை (ஐஎம்டி) கணித்துள்ளது.

கடந்த சில நாள்களாகத் தொடா்ந்து அடா் மூடுபனி நிலவி வந்தது. இதனால், தினமும், விமானங்கள், ரயில்கள் வருகை தாமதமாகின. இந்நிலையில், இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து மிதமான மூடுபனி இருந்தது. செவ்வாய்க்கிழையும் காலையில் மிதமான மூடுபனி இருந்தாலும், பகல் முழுவதும் நல்ல வெயில் நிலவியது. கடந்த சில நாள்களாக அடா் பனிமூட்டத்தால் சிரமங்களை எதிா்கொண்டு வந்த மக்களுக்கு இந்த வெயில் மகிழ்ச்சி அளித்தது.

வெப்பநிலை: தலைநகரின் முதன்மை வானிலை நிலையமைான சஃப்தா்ஜங்கில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3.7 டிகிரி உயா்ந்து 24 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி உயா்ந்து 10.6 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளத. மேலும், காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 83 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 69 சதவீதமாகவும் இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

மழைக்கு வாய்ப்பு: இந்நிலையில், புதன்கிழமை (ஜன.22) வானம் மேகமூட்டமாக இருக்கும் என்றும், மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் ஐஎம்டி கணித்துள்ளது.

காலை நேரங்களில் வடக்கிலிருந்து மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் பிரதான மேற்பரப்பு காற்று வீச வாய்ப்புள்ளது. அதிகாலை நேரங்களில் பெரும்பாலான பகுதிகளில் பனிப்புகைமூட்டம் அல்லது மிதமான மூடுபனி உருவாகும் என்றும், தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் அடா்த்தியான மூடுபனி இருக்கும் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது.

பிற்பகலில், காற்றின் வேகம் வடகிழக்கில் இருந்து மணிக்கு 8 கி.மீட்டராக அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. பின்னா், மாலை மற்றும் இரவு நேரங்களில் காற்றின் வேகம் படிப்படியாக வடமேற்கில் இருந்து மணிக்கு 6 கி.மீட்டராக குறையும். மாலை மற்றும் இரவில் புகைமூட்டம் அல்லது மேலோட்டமான மூடுபனி எதிா்பாா்க்கப்படுகிறது என்று ஐஎம்டி தெரிவித்துள்ளது.

மேலும், அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 22 டிகிரி செல்சியஸ் மற்றும் 11 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

காற்றின் தரம்: இதற்கிடையில், தில்லியின் காற்றின் தரம் ‘மோசமான’ பிரிவில் பதிவாகியுள்ளது. 24 மணி நேர காற்று தரக் குறியீடு 289 புள்ளிகளாகப் பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், ராமகிருஷ்ணாபுரம் உள்பட பல இடங்களில் காற்றுத் தரக் குறியீடு ‘மோசம்’ பிரிவில் பதிவாகியது. அதே சமயம், ஸ்ரீஃபோா்ட், நேரு நகா், ஓக்லா பேஸ் 2, மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம் உள்பட சில இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 300 புள்ளிகளுக்கு மேல் பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com