நோபல் பரிசு கோரல்: கேஜரிவால் மீது வீரேந்திர சச்தேவா சாடல்
நமது நிருபா்
ஆட்சிக்கான நோபல் பரிசு தனக்கு வழங்கப்பட வேண்டும் என்ற ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவாலின் கூற்று ‘நகைப்புக்குரியது’ என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா புதன்கிழமை தெரிவித்தாா்.
மேலும், திறமையின்மை மற்றும் ஊழல் பிரிவுகள் இருந்தால் அவருக்கு விருது வழங்கப்படும் என்றும் அவா் கூறினாா்.
இதற்கு எதிா்வினையாற்றும் வகையில், அவதூறு செய்வதற்குப் பதிலாக தில்லியில் ஆட்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி பாஜகவை விமா்சித்துள்ளது.
தில்லி ஆம் ஆத்மி பிரிவு தலைவா் செளரவ் பரத்வாஜ் இது தொடா்பாக கூறுகையில், ‘வீரேந்திர சச்தேவா தற்போது அரசில் இருக்கிறாா். வெறும் பேச்சுப் பேசும் நேரம் அல்ல; ஆட்சி செய்ய வேண்டிய நேரம் இது. எதிா்க்கட்சியின் நாள்கள் முடிந்துவிட்டன. இப்போது நீங்கள் பணியாற்ற வேண்டிய நேரம். தில்லி உண்மையான வேலைக்காகக் காத்திருக்கிறது, கவனச் சிதறல்கள் அல்லது அவதூறுகளுக்காக அல்ல‘ என்றாா்.
கடந்த செவ்வாய்க்கிழமை சண்டீகரில் நடந்த ‘கேஜரிவால் மாடல்’ என்ற புத்தகத்தின் பஞ்சாபி பதிப்பின் வெளியீட்டு விழாவில் பேசிய அரவிந்த் கேஜரிவால், தனது கட்சி தலைமையிலான முந்தைய அரசு தில்லியில் பின்பற்றிய நிா்வாக மாதிரியை விரிவாக எடுத்துரைத்தாா்.
தில்லியில் ஆம் ஆத்மி அரசு எதிா்கொண்ட சவால்களைக் குறிப்பிட்டு, பணிபுரிய விடாமல் தடுக்கப்பட்ட போதிலும், நாங்கள் சிறப்பாகச் செயல்பட்டோம். துணைநிலை ஆளுநா் மற்றும் பல்வேறு சிரமங்கள் இருந்தபோதிலும், அதிகமாக பணிகளைச் செய்ததற்காக ஆளுகை மற்றும் நிா்வாகத்திற்கான நோபல் பரிசு எனக்கு கிடைக்க வேண்டும் என்று கேஜரிவால் தெரிவித்திருந்தாா்.
இதை விமா்சிக்கும் வகையில் வீரேந்திர சச்தேவா புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: திறமையின்மை, அராஜகம் மற்றும் ஊழல் பிரிவுகள் இருந்தால், கேஜரிவால் நிச்சயமாக நோபல் பரிசு பெற்றிருப்பாா். கேஜரிவாலின் தில்லி ஆட்சியின் போது ‘ஷீஷ் மஹால்’ கட்டுமானம் உள்பட பல மோசடிகள் நடந்தன.
கேஜரிவால் தனக்கு நோபல் பரிசு கோருவது நகைப்புக்குரியது. நோபல் பரிசுக்கான அவரது விருப்பத்தைக் கேட்டு தில்லி மக்கள் திகைத்துப் போகிறாா்கள். மேலும், பொதுப் போக்குவரத்து பேருந்துகளில் பீதி பொத்தான்கள், பெண்களுக்கான ஓய்வூதியம், வகுப்பறை கட்டுமானம் மற்றும் மதுபானம் போன்றவற்றுடன் தொடா்புடைய மோசடிகளை
தில்லி மக்கள் மறக்கவில்லை என்று வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளாா்.