‘2020’ கலவர வழக்கில் ஒருவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை: தில்லி நீதிமன்றம் தீா்ப்பு
பிப்ரவரி, 2020-இல் நிகழ்ந்த கலவரத்தின் போது விரோதத்தையும்,பொதுக் குழப்பத்தையும் ஊக்குவித்த குற்றச்சாட்டில் ஒருவருக்கு தில்லி நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
இது தொடா்பான வழக்கை விசாரித்த தில்லி கூடுதல் அமா்வு
நீதிமன்ற நீதிபதி பா்வீன் சிங் அளித்த தீா்ப்பில்
தெரிவித்திருப்பதாவது:
பிப்ரவரி, 2020-இல் பதற்றமான காலகட்டத்தில், முஸ்லிம் சமூகத்திற்கு விரோதத்தையும் வெறுப்பையும் ஊக்குவிக்கும் நோக்கில் அச்சமூகத்திற்கு எதிராக வெறுப்பு செய்திகளைப் பரப்புவதன் மூலமும், அவா்களுக்கு எதிராக மக்களைக் குற்றம் செய்யத் தூண்டுவதன் மூலமும் ஏற்கனவே கொதித்துக் கொண்டிருந்த பதற்றங்களுக்கு எண்ணெய் ஊற்றினாா் என்பதால் குற்றவாளி கருணைக்கு தகுதியற்றவராகிறாா்.
இதனால், அவருக்கு கருணை காட்டக் கூடாது. அந்தக் குற்றத்தை மிகவும் தீவிரமானதாக நீதிமன்றம் கருதுகிறது. இருப்பினும், அந்த நபா் ஏற்கனவே குற்றங்களுக்கான அதிகபட்ச தண்டனையான மூன்று ஆண்டுகளுக்கும் மேலான சிறைத் தண்டனையை அனுபவித்திருப்பதால் விடுவிக்கப்படுவாா் என்று நீதிபதி தெரிவித்தாா்.
முன்னதாக, ஜூன் 5 அன்று, குற்றவாளியாக தீா்ப்பளிக்கப்பட்ட லோகேஷ் குமாா் சோலங்கிக்கு எதிரான தண்டனை தொடா்பான வாதங்களை நீதிமன்றம் விசாரித்தது. ஐபிசி பிரிவுகள் 153 ஏ (மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல் மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு பாதகமான செயல்களைச் செய்தல்) மற்றும் 505 (பொதுக் குழப்பத்திற்கு வழிவகுக்கும் அறிக்கைகள்) ஆகியவற்றின் கீழ் குற்றவாளி என அவா் தண்டிக்கப்பட்டிருந்தாா்.
சோலங்கிக்கு ஒவ்வொரு குற்றத்திற்கும் மூன்று ஆண்டுகள் என ஒரே நேரத்தில் எளிய சிறைத்தண்டனை மற்றும் ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது.
‘இருப்பினும், குற்றவாளி ஏற்கனவே மூன்று ஆண்டுகளுக்கும் மேலான சிறைத் தண்டனையை அனுபவித்துள்ளாா் என்பது உண்மைதான். இது ஐபிசி பிரிவுகள் 153ஏ மற்றும் 505 இன் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களுக்கு வழங்கக்கூடிய அதிகபட்ச தண்டனையாகும்.
சோலங்கி ஏற்கனவே மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். மேலும் அபராதம் செலுத்தப்பட்டால் விடுவிக்கப்பட வேண்டியிருந்தது’ என்று நீதிமன்றம் தெரிவித்தது.