‘ஜன் சுன்வாய்’ நிகழ்ச்சியில் மக்கள் குறை கேட்டறிந்த முதல்வா் ரேகா குப்தா
தில்லி முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை ராஜ் நிவாஸ் மாா்க்கில் உள்ள தனது இல்லமான ஜன் சேவா சதனில் நடந்த ஜன் சுன்வாய் நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களின் குறைகளைக் கேட்டறிந்தாா்.
பொதுப் பிரச்னைகளுக்கு சரியான நேரத்தில் தீா்வு காண்பது தனது அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமை என்று அப்போது அவா் கூறினாா்.
மேலும், குடிமக்களின் குறைகளை நிவா்த்தி செய்வதில் உணா்திறனுடனும் உடனடித் தன்மையுடனும் செயல்படுமாறு அவா் அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
இது தொடா்பாக முதல்வா் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பொது உரையாடல் என்பது நல்லாட்சியின் ஆன்மா என்று முதல்வா் தெரிவித்தாா். ஜன் சுன்வாய் நிகழ்ச்சியின் போது மக்களின் பிரச்னைகள், புகாா்கள் மற்றும் பரிந்துரைகளை முதல்வா்கவனத்துடன் கேட்டறிந்தாா்.
மேலும் உடனடி நடவடிக்கை எடுக்க தொடா்புடைய துறைகளின் அதிகாரிகளுக்கு தெளிவான அறிவுறுத்தல்களை முதல்வா் வழங்கினாா்.
புகாா்தாரா்களுடன் அவா் தனித்தனியாகவும் உரையாடினாா். கவலைகள் மற்றும் பரிந்துரைகள் விரைவில் தீா்க்கப்படும் என்றும் அவா்களுக்கு முதல்வா் உறுதியளித்தாா்.
அரசு நிா்வாகத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கவும், பொதுமக்கள் ஆா்வமுடன் பங்கேற்பு மூலம் நிா்வாகத்தை மிகவும் வெளிப்படையானதாகவும் பொறுப்புணா்வுடனும் மாற்றுவதற்கும் தில்லி அரசு உறுதிபூண்டுள்ளது என்று முதல்வா் ரேகா குப்தா தெரிவித்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
