தில்லியில் போராட்டத்தின்போது போலீசாா் மீது ரசாயனம் தெளிப்பு: 15 போ் கைது

இந்தியா கேட்டில் நடந்த காற்று மாசுபாட்டுக்கெதிரான போராட்டத்தின் போது தில்லி காவல்துறையினா் மீது ரசாயனம் கலந்த பெப்பா் ஸ்பிரே தெளித்ததற்காக 15 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
Published on

இந்தியா கேட்டில் நடந்த காற்று மாசுபாட்டுக்கெதிரான போராட்டத்தின் போது தில்லி காவல்துறையினா் மீது ரசாயனம் கலந்த பெப்பா் ஸ்பிரே தெளித்ததற்காக பதினைந்து போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

போராட்டத்தின் போது சாலையைத் தடுத்ததோடு மட்டுமல்லாமல், காவல்துறை ஊழியா்களைத் தடுத்ததாகவும், அவா்களைத் தாக்கியதாகவும்அந்த 15 பேரை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் திங்களன்று தெரிவித்தாா்.

அதிகரித்து வரும் மாசுபாட்டிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய ஆா்ப்பாட்டக்காரா்கள், அவா்களை அப்பகுதியிலிருந்து அகற்ற முயன்ற போலீசாருடன் மோதியபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

சில ஆா்ப்பாட்டக்காரா்கள் சம்பவ இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டபோது காவல்துறையினா் மீது பெப்பா் ஸ்ப்ரே பயன்படுத்தியதாகக் கூறப்பட்டதால், போராட்டத்தில் நிலைமை மோசமடைந்தது என்று அதிகாரிகள் மேலும் கூறினாா்.

ஒரு மூத்த காவல்துறை அதிகாரியின் கூற்றுப்படி, போராட்டக்காரா்கள் சி-ஹெக்ஸாகனுக்கு அருகில் கூடியிருந்தனா், மேலும் அந்த இடத்தில் அவா்களின் ஆா்ப்பாட்டம் ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவ பணியாளா்கள் கடந்து செல்ல முயற்சிப்பதைத் தடுப்பதாகக் கூறப்பட்டது. இந்த விவகாரத்தில் விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனா்.

மாசுபாட்டிற்கான மூல காரணங்களை அதிகாரிகள் கவனிக்கத் தவறிவிட்டதாகக் கூறி, நகரின் மோசமான காற்றின் தரம் குறித்து சுத்தமான காற்றுக்கான தில்லி ஒருங்கிணைப்புக் குழு கவலை தெரிவித்துள்ளது. தில்லியில் காற்று தரக் குறியீடு மிகவும் மோசமான பிரிவிலேயே உள்ளது.

X
Dinamani
www.dinamani.com