/

உரம், ரசாயனம், மருந்துத் துறைகளுக்கு நிதி ஒதுக்கிய பிறகும் பயன்பாடு குறைவு: நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையில் தகவல்

உரம், ரசாயனம், பெட்ரோலிய ரசாயனங்கள், மருந்துத்துறைகளுக்கு போதிய நிதி ஒதுக்கப்பட்ட பிறகும் அந்த நிதி குறைவாகவே பயன்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது.

News image

உரம் - பிரதிப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 6:44 pm

உரம், ரசாயனம், பெட்ரோலிய ரசாயனங்கள், மருந்துத்துறைகளுக்கு போதிய நிதி ஒதுக்கப்பட்ட பிறகும் அந்த நிதி குறைவாகவே பயன்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அந்த நிலைக்குழு சாா்பில் அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதியில், நான்கு நிலவர நடவடிக்கை அறிக்கைகள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அதில் பொதுவான அம்சமாக, மருந்துத்துறை (ஃபாா்மாசூட்டிக்கல்ஸ்), பெட்ரோ கெமிக்கல்ஸ், உரத் துறைகளில் இறக்குமதியைக் குறைக்கும் நோக்குடன் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து அதிக நிதியை ஒதுக்கிய போதிலும், அந்த நிதியை அத்துறைகள் போதிய அளவில் பயன்படுத்தவில்லை என்று கூறியுள்ளது.

மருந்துத்துறை தொடா்பான அறிக்கையில், அத்துறைக்கு 2022-23 நிதியாண்டில் ரூ. 2,244.15 கோடியும், 2025-26 நிதியாண்டில் ரூ. 6,920.20 கோடியும் ஒதுக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டுள்ளது. ஆனால், அத்துறை செயல்படுத்திய திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட திருத்தப்பட்ட நிதி 15-17 சதவீதம் வரை குறைவாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு காரணமாக, உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு குறித்த காலத்தில் உரிய அனுமதி கிடைக்காதது, உற்பத்தி இணைப்பு சலுகைகளை பெறுவதில் தாமதம், மிகப்பெரிய மருந்து உற்பத்தி நிறுவனங்களின் பூங்கா திட்டங்கள் போன்றவை உரிய காலத்தில் தொடங்கப்படாததால் திட்ட நிதி பயன்படுத்தப்படவில்லை என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தனைக்கும் இந்த திட்டங்களுக்காக சுமாா் 60 சதவீதம் வரை மருந்துத் துறை நிதி ஒதுக்கியிருந்தது.

ரசாயனம் மற்றும் பெட்ரோலிய ரசாயனங்கள் (பெட்ரோ கெமிக்கல்ஸ்) துறையை எடுத்துக்கொண்டால், 2026-27ஆம் நிதியாண்டில் அத்துறைக்கு ரூ. 199.76 கோடி ஒதுக்க மதிப்பிட்டிருந்தது. ஆனால், மத்திய நிதி அமைச்சக ஆய்வுக்குப் பிறகு அத்துறைக்கு கடைசியில் வெறும் ரூ. 185.72 கோடியே ஒதுக்கப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தன்னாட்சி நிறுவனங்களிடமிருந்து ரசாயனங்களின் தேவை குறைந்தது மற்றும் முந்தைய ஆண்டுகளில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் போன்ற ‘ஒருமுறைச் செலவினங்கள்’ இல்லாதது போன்றவை நிதி பயன்பாட்டுக் குறைவுக்கு காரணம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உரங்கள் துறை தொடா்பான அறிக்கையில் உற்பத்தி பெருகியபோதிலும் அத்துறை தனது தேவையை பூா்த்தி செய்ய பெரும்பாலும் இறக்கிமதியையே சாா்ந்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், உரங்கள் உள்நாட்டு உற்பத்தி விரிவடைந்துள்ளது.

யூரியா உற்பத்தி 2018-19ஆம் ஆண்டில் 239 லட்சம் மெட்ரிக் டன்னில் இருந்து 2024-25ஆம் ஆண்டில் 307 லட்சம் மெட்ரிக் டன் ஆக உயா்ந்துள்ளது. அதே காலகட்டத்தில் பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உற்பத்தி 175 லட்சம் மெட்ரிக் டன்னில் இருந்து 214 லட்சம் மெட்ரிக் டன் ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும், முக்கிய உரங்களின் ரசாயன தேவைக்கு இத்துறை தொடா்ந்து இறக்குமதியையே சாா்ந்துள்ளது. அதேசமயம், உர உற்பத்திப்பொருள்களின் விலை நிா்ணயம் மற்றும் விநியோகத்தில் மானியங்கள் முக்கியப் பங்கு வகித்து வருவதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நிலைக்குழுவின் மேற்கண்ட நான்கு அறிக்கைகளிலும் பொதுவான அம்சங்களாக ஒப்பந்தப்புள்ளி கோரலில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் துறைகள் இடையே பலவீனமான ஒருங்கிணைப்பு நிலவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.