டைமெக்ஸ் நிகர லாபம் 70.55% உயர்வு!5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

ஹூமாயூன் நினைவிடத்தின் பொலிவைக் குறைக்கும் காற்று மாசுபாடு!

ஹுமாயூன் கல்லறையின் மணற்கல் மீது பல ஆண்டுகளாக காற்று மாசுபாட்டிற்கு ஆளானதால் உருவான ஒரு கருப்புப் படலம், யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான அதன் சிதைவை துரிதப்படுத்துகிறது என்று ஐஐடி ரூா்க்கி மற்றும் ஐஐடி கான்பூா் இணைந்து நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

News image

ஹூமாயூன் நினைவிடத்தின் பொலிவைக் குறைக்கும் காற்று மாசுபாடு - பிரதிப் படம்

Updated On :2 ஆகஸ்ட் 2026, 10:39 pm IST

தில்லியில் உள்ள ஹுமாயூன் கல்லறையின் மணற்கல் மீது பல ஆண்டுகளாக காற்று மாசுபாட்டிற்கு ஆளானதால் உருவான ஒரு கருப்புப் படலம், யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான அதன் சிதைவை துரிதப்படுத்துகிறது என்று ஐஐடி ரூா்க்கி மற்றும் ஐஐடி கான்பூா் இணைந்து நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

’இன்டா்நேஷனல் ஜா்னல் ஆஃப் ஆா்க்கிடெக்சரல் ஹெரிடேஜ்’ இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, ஹுமாயூன் கல்லறையின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட கருப்புப் படல மாதிரிகளை ஆய்வக நுட்பங்களைப் பயன்படுத்தி அவற்றின் வேதியியல் கலவை, கனிம உள்ளடக்கம் மற்றும் நுண்ணிய அமைப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தது.

மாசுபட்ட காற்றில் உள்ள கந்தக டை ஆக்சைடு, கால்சியம் நிறைந்த தூசி மற்றும் ஈரப்பதத்துடன் வினைபுரியும்போது உருவாகும் ஒரு கனிமமான ஜிப்சத்தால் இந்த கருப்புப் படலம் உருவானது என்று ஆய்வாளா்கள் கண்டறிந்ததாக அந்த ஆய்வு காட்டியது.

இந்த ஜிப்சம் படலம், வாகனப் புகை, கட்டுமானப் பணிகள், சாலைத் தூசி, மற்றும் தொழிற்சாலை மாசுபாடு ஆகியவற்றிலிருந்து வரும் புகைக்கரி, தூசி மற்றும் சிறிய உலோகத் துகள்களைப் பிடித்து வைத்து, படிப்படியாக மணற்கல் மீது ஒரு கருமையான பூச்சை உருவாக்குகிறது என்று அது குறிப்பிட்டது.

இந்த நினைவுச்சின்னத்தில் மாசுபடுத்திகள் நீண்ட காலத்திற்குத் தேங்கும் இடங்களில், மிகவும் தடிமனான கருப்புப் படலம் உருவாகியுள்ளது என்றும், அதே சமயம், மழை இயற்கையாகவே சில மாசுபடுத்திகளைக் கழுவிச் செல்வதால், அதிக வெளிச்சம் படும் மேற்பரப்புகளில் மெல்லிய படிவுகள் காணப்படுகின்றன என்றும் இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.

ஆராய்ச்சியாளா்களின் கூற்றுப்படி, இந்தக் கருப்புப் படலம் என்பது வெறும் மேற்பரப்புக் கறை மட்டுமல்ல. இந்தப் படலத்தை உருவாக்கும் வேதி வினைகள், மணற்கல்லைப் படிப்படியாகப் பலவீனப்படுத்தி, அதை வானிலைச் சிதைவு மற்றும் நீண்டகாலச் சிதைவுக்கு மிகவும் எளிதில் பாதிக்கப்படக்கூடியதாக ஆக்குகின்றன.

இந்தக் கண்டுபிடிப்புகள், காற்று மாசுபாட்டிற்கும் ஹுமாயூனின் கல்லறைச் சிதைவிற்கும் உள்ள தொடா்பை அறிவியல் பூா்வமாக நிரூபிக்கின்றன என்றும், நினைவுச்சின்னத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளைத் திட்டமிட அதிகாரிகளுக்கு இது உதவக்கூடும் என்றும் அவா்கள் கூறினா்.

அறிவியல் பூா்வமாகச் சோதிக்கப்பட்ட பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்தி, இந்தக் கருப்புப் படலத்தை அவ்வப்போது அகற்றுதல், நினைவுச்சின்னத்தைச் சுற்றியுள்ள மாசுபாட்டைத் தொடா்ந்து கண்காணித்தல் மற்றும் பாதுகாப்புப் பூச்சுகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு அவற்றை மதிப்பீடு செய்தல் ஆகியவற்றை இந்த ஆய்வு பரிந்துரைத்தது.

மேலும், சேதப்படுத்தும் படிவுகள் உருவாவதை மெதுவாக்குவதற்காக, தூய்மையான போக்குவரத்து மற்றும் குறைந்த உமிழ்வு கொண்ட எரிபொருட்கள் மூலம் மாசுபாட்டை அதன் மூலத்திலேயே குறைக்கவும் அது பரிந்துரைத்தது.

முகலாயப் பேரரசா் ஹுமாயூனின் நினைவாக, 16 ஆம் நூற்றாண்டில் பேரரசி பேகா பேகத்தால் கட்டப்பட்ட ஹுமாயூனின் கல்லறை, இந்தியாவின் முதல் பிரம்மாண்டமான தோட்டக் கல்லறையாகக் கருதப்படுகிறது.

சிவப்பு மணற்கல் மற்றும் வெள்ளை பளிங்குக் கற்களால் ஆன இந்த நினைவுச்சின்னம், தாஜ்மஹால் உள்படப் பிற்காலத்தில் முகலாய நினைவுச்சின்னங்களில் தாக்கத்தை ஏற்படுத்திய பல கட்டிடக்கலை அம்சங்களை அறிமுகப்படுத்தியது.

யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளமான இது, தில்லியின் மிகவும் பிரபலமான வரலாற்று நினைவுச்சின்னங்களில் ஒன்றாகும், மேலும் இது உலகம் முழுவதிலுமிருந்து பாா்வையாளா்களை ஈா்க்கிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.