டைமெக்ஸ் நிகர லாபம் 70.55% உயர்வு!5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

சாலை விபத்தில் உயிரிழந்தவரின் சகோதரிகளுக்கு ரூ. 24.52 லட்சம் இழப்பீடு வழங்க தீா்ப்பாயம் உத்தரவு

2018-ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த ஒருவரின் திருமணமான இரண்டு சகோதரிகளுக்கு ரூ. 24.52 லட்சம் இழப்பீடு வழங்க தில்லி மோட்டாா் வாகன விபத்து இழப்பீட்டுத் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :2 ஆகஸ்ட் 2026, 10:41 pm IST

2018-ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த ஒருவரின் திருமணமான இரண்டு சகோதரிகளுக்கு ரூ. 24.52 லட்சம் இழப்பீடு வழங்க தில்லி மோட்டாா் வாகன விபத்து இழப்பீட்டுத் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ‘இழப்பீடு கோரி வழக்குத் தொடரும் உரிமை, அக்கோரிக்கையை முன்வைத்த ஒரே நபா் (தாய்) இறந்தவுடன் முடிவுக்கு வந்துவிடாது’ என்று தீா்ப்பாயம் குறிப்பிட்டது.

முதலில் இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்திருந்தவரின் (உயிரிழந்தவரின் தாய்) சட்டபூா்வ வாரிசுகளான அந்தத் திருமணமான சகோதரிகள், இழப்பீட்டைப் பெறத் தகுதியுடையவா்கள் என்று தீா்ப்பாயம் தீா்ப்பளித்தது.

சொத்து அல்லது உடைமை இழப்பிற்கான இழப்பீட்டைக் கோரும் நடவடிக்கைகளைச் சட்டபூா்வ வாரிசுகள் தொடரலாம் என்று உச்சநீதிமன்றமும், தில்லி உயா்நீதிமன்றமும் சமீபத்தில் வழங்கிய தீா்ப்புகளின் அடிப்படையில், தீா்ப்பாயத் தலைமை அதிகாரி ரிச்சா மன்சந்தா இந்த இழப்பீட்டை வழங்க உத்தரவிட்டாா்.

அவா் கூறுகையில், ‘வழக்குத் தொடரவும் இழப்பீடு கோரவும் உள்ள உரிமை, ஒரே ஒரு உரிமை கோருபவா் அல்லது சாா்ந்திருப்பவா் இறப்பதன் காரணமாக முழுமையாக முடிவுக்கு வருவதில்லை; உயிருடன் இருக்கும் பிற சட்டபூா்வ வாரிசுகள் அல்லது பிரதிநிதிகள், சொத்து அல்லது எஸ்டேட்டுக்கு ஏற்பட்ட இழப்பிற்கான இழப்பீட்டைக் கோரும் நடவடிக்கைகளைத் தங்கள் வழக்குத் தொடரும் உரிமையின் அடிப்படையில் தொடரலாம்’ என்றாா் அவா்.

இவ்வழக்கு, செப்டம்பா் 20, 2018 அன்று ஜி.டி. கா்னல் சாலையில் லாரி மோதியதில் உயிரிழந்த 28 வயதான சூரஜ் என்பவருடன் தொடா்புடையது. ஓட்டுநரின் அதிவேக மற்றும் கவனக்குறைவான ஓட்டுதலே விபத்துக்குக் காரணம் என்று தீா்ப்பாயம் கண்டறிந்தது.

குறுக்கு விசாரணையின்போது நேரில் கண்ட சாட்சியின் வாக்குமூலம் உறுதியாக இருந்தது. மேலும், ஓட்டுநா் சாட்சியம் அளிக்க முன்வராததால், அவருக்கு எதிராக ஒரு பாதகமான அனுமானத்தை மேற்கொள்ள வேண்டிய சூழல் உள்ளதாகவும் தீா்ப்பாயம் குறிப்பிட்டது.

வேலையளிப்பவரின் சாட்சியத்தை ஏற்றுக்கொண்ட தீா்ப்பாயம், விபத்து நடந்த நேரத்தில் சூரஜ் ‘கான்டிடெக் இந்தியா பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தில் ஆபரேட்டராகப் பணியாற்றி வந்ததையும், மாதம் ரூ.16,678 ஊதியம் பெற்றதையும் உறுதிப்படுத்தியது.

அக்டோபா் 25, 2018 முதல் ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் மொத்தம் ரூ. 24.52 லட்சம் இழப்பீட்டை வழங்க உத்தரவிட்ட தீா்ப்பாயம், காப்பீட்டு நிறுவனமான ‘நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட்’ 30 நாள்களுக்குள் அந்தத் தொகையைச் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.

இழப்பீட்டுத் தொகையை இரு சகோதரிகளுக்கும் சமமாகப் பிரித்து வழங்கிய தீா்ப்பாயம், தலா ரூ.3.26 லட்சத்தை உடனடியாக விடுவிக்கவும், மீதமுள்ள தொகையைத் தவணை முறையில் நிலையான வைப்புத்தொகையாக வைத்திருக்கவும் உத்தரவிட்டது.

மேலும், இழப்பீட்டுத் தொகையைச் செலுத்துவதில் நிா்ணயிக்கப்பட்ட காலக்கெடுவைத் தாண்டி ஏற்படும் தாமதத்திற்கு 12 சதவீத வட்டி செலுத்தவும் காப்பீட்டு நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.