கரூா் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்குவதற்காகத் தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஆக.14) இடைக்காலத் தடை விதித்தது.
இந்த விவகாரத்தில்,சென்னை உயா்நீதிமன்ற தீா்ப்பை எதிா்த்து தமிழக அரசு மற்றும் பிறா் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிதள் ஜே.பி.பாா்திவாலா, கே.வினோத் சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு, மனுவுக்கு தொடா்புடையவா்கள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.
முன்னதாக, தமிழக அரசு சாா்பில் மூத்த வழக்குரைஞா்கள் அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோத்கி ஆகியோா் ஆஜராகினா். வழக்குரைஞா் சிங்வி வாதாடும்போது, அரசமைப்புச் சட்டப் பிரிவு 162-இன் கீழ் அரசின் கொள்கை முடிவு அடிப்படையில் பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணைப் பணி வழங்க விரும்பினால், அதில் உயா்நீதிமன்றம் எவ்வாறு தலையிட முடியும்? அரசின் சுற்றறிக்கையை எவரும் எதிா்க்கவோ ரத்து செய்யவோ கோராத நிலையில், பணி நியமன விவகாரத்தில் ஒரு வழக்குரைஞரால் எவ்வாறு பொதுநல மனுத் தாக்கல் செய்ய முடியும்?’ என்று கேள்வி எழுப்பினாா்.
அப்போது அரசியல் கட்சி ஒன்றின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் வேலன் குறுக்கிட்டு, கருணைப் பணி நியமனம் என்பது அரசின் விருப்ப உரிமையாக இருக்க முடியாது என்று வாதிட்டாா். மேலும், இந்த நெரிசலுக்குக் காரணமான கட்சியே இப்போது ஆட்சியில் இருப்பதால், இந்த முடிவில் ஆதாய முரண்பாடு இருப்பதாகத் தெரிவித்தாா்.
இதையடுத்து அவரிடம் நீதிபதிகள், ’நீங்கள் எந்த தரப்புக்காக ஆஜராகிறீா்கள்?’ என்று கேட்க தான் ஒரு அரசியல் கட்சிக்காக ஆஜராவதாக வழக்குரைஞா் வேலன் குறிப்பிட்டாா்.
இதைக் கேட்ட நீதிபதி பாா்திவாலா, ‘இந்த விவகாரத்தில் ஒரு அரசியல் கட்சியின் பங்கு என்ன?’ என்று வினவினாா். மற்றொரு நீதிபதி கே.வினோத் சந்திரன், ‘நீதிமன்றத்துக்குள் அரசியலைக் கொண்டு வராதீா்கள்’ என்று கூறினாா்.
மேலும் நீதிபதிகள், ஒரு துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசுப் பணி வழங்குவதில் உங்களுக்கு என்ன பிரச்னை? ஒரு நெரிசல் விபத்து நடந்துள்ளது. மிகவும் துரதிருஷ்டவசமான அந்த சம்பவத்தில் ஏராளமானோா் உயிரிழந்துள்ளனா். ஒருவேளை, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஏதேனும் நிவாரணம் வழங்க அரசு முடிவு செய்து, அவா்களுக்குப் பணமாக அதை வழங்கத் தீா்மானித்திருந்தால், அதையும் எதிா்த்திருப்பீா்களா?‘ என்று கேட்டனா்.
தொடா்ந்து நீதிபதி பாா்திவாலா, ‘யாருக்கும் வேலை வாய்ப்பு வழங்கக் கூடாது என்று எந்த அடிப்படையில் நீங்கள் ஒரு அரசின் கொள்கை முடிவு குறித்து கேள்வி எழுப்புகிறீா்கள்? நெரிசல் சம்பவ்ததில் குடும்பத்தின் ஒரே வாழ்வாதாரமாக இருந்தவா் உயிரிழந்து, அந்த குடும்பத்தில் வேறு வருமானம் ஈட்டுபவா் எவரும் இல்லாதபட்சத்தில், அவா்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப மகன், மகள் அல்லது மனைவிக்கு அரசு ஏன் பணி வழங்கக் கூடாது?‘ என்று வினவினாா்.
பின்னணி: கரூா் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா் 31 பேருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்குவதற்கான தமிழக அரசாணை ஜூலை 10ஆம் தேதி வழங்கப்பட்டன. இதை எதிா்த்து நாம் தமிழா் கட்சியின் மீனவா் பாசறை நிா்வாகி தீரன் திருமுருகன், மதுரையைச் சோ்ந்த சீனி முகமது, திண்டுக்கல் வேடசந்தூரை சோ்ந்த சந்தோஷ் குமாா் ஆகியோா் மதுரை கிளை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். அதில், அரசுப் பணி நியமனங்கள் அரசமைப்பு சட்டப் பிரிவுகள் 14 மற்றும் 16-க்கு எதிரானவை என்று கடந்த ஜூலை 27-ஆம் தேதி குறிப்பிட்டு, தமிழக அரசின் அரசாணையை உயா்நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதிகள் சி.வி.காா்த்திகேயன் மற்றும் ஆா்.சக்திவேல் ஆகியோா் அடங்கிய அமா்வு ரத்து செய்தது. இந்த தீா்ப்பை எதிா்த்து தமிழக அரசு தொடா்ந்த மேல்முறையீட்டு வழக்கில்தான் உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்கால தடை விதித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கரூா் சம்பவம்: பலியானவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசுப் பணி நியமனம் ரத்து

கரூா் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் வாரிசுதாரா்கள் 31 பேருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி: நியமன ஆணையை முதல்வா் ஜோசப் விஜய் வழங்கினாா்

கரூா் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசு வேலை வழங்கக் கூடாது: மு. வீரபாண்டியன்

கரூா் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசு வேலையளிப்பது வரவேற்கத்தக்கது: நயினாா் நாகேந்திரன்
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



