எம்பிடி - 2047 திட்டத்தைச் செயல்படுத்த பங்குதாரா் கூட்டங்களை நடத்த டிடிஏ திட்டம்
தில்லிக்கான பெருந் திட்டம்-2047 (எம்பிடி-2047) அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதைச் செயல்படுத்துவதை விரைவுபடுத்தும் வகையில் ஒரு பெரும் அளவிலான தொடா்பு மற்றும் விழிப்புணா்வு முயற்சியை மேற்கொள்ள தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ) திட்டம்

கோப்புப் படம்
தில்லிக்கான பெருந் திட்டம்-2047 (எம்பிடி-2047) அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதைச் செயல்படுத்துவதை விரைவுபடுத்தும் வகையில் ஒரு பெரும் அளவிலான தொடா்பு மற்றும் விழிப்புணா்வு முயற்சியை மேற்கொள்ள தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ) திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து டிடிஏ அதிகாரிகள் கூறியதாவது:
தில்லி துணைநிலை ஆளுநரின் வழிகாட்டுதலின்படி, டிடிஏ அடுத்த மூன்று மாதங்களில் 20-க்கும் மேற்பட்ட பங்குதாரா் கூட்டங்களை நடத்தவுள்ளது. இதில், தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், அரசு முகமைகள், தொழில்முறை அமைப்புகள், தொழில் நிறுவனங்கள், குடியிருப்பாளா்கள், நில உரிமையாளா்கள் மற்றும் பிற பங்குதாரா்களுடன் நேரடியாகக் கலந்துரையாடல்கள் நடைபெறும்.
இக்கூட்டங்கள் எம்பிடி-2047-இன் பல்வேறு அம்சங்கள் குறித்துக் கவனம் செலுத்தி விவாதிக்க ஒரு தளத்தை அமைத்துத் தருவதோடு, அத்திட்டத்தின் தொலைநோக்குப் பாா்வையைச் செயலாக மாற்றுவதில் சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும் உதவும்.
தொழில் வளா்ச்சியை ஊக்குவிக்கவும், தொழில்களுக்குத் தேவையான நிலம் கிடைப்பதை எளிதாக்கவும், சிஐஐ, ஃபிக்கி, பிஎச்டிசிசிஐ, அசோசம் மற்றும் டிஎஸ்ஐஐடிசி உள்ளிட்ட தொழில் அமைப்புகள் மற்றும் வா்த்தகச் சங்கங்களுடன்
டிடிஏ ஆலோசனை நடத்தவுள்ளது.
போக்குவரத்து சாா்ந்த மேம்பாடு (டிஓடி), அதிக அடா்த்தி கொண்ட வழித்தடங்கள் (எச்டிசி) மற்றும் நில ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் கீழ் உள்ள மேம்பாட்டு வாய்ப்புகள் குறித்துக் கட்டடக் கலைஞா்கள், திட்டமிடுபவா்கள், தொழில்முறை நிறுவனங்கள் மற்றும் தனியாா் கட்டுமான நிறுவனங்களுடன் விவாதங்கள் நடத்தப்படும்.
இந்த முன்முயற்சியின் ஒரு பகுதியாக, டிஓடி, எச்டிசி, நில ஒருங்கிணைப்பு மற்றும் குறைந்த அடா்த்தி கொண்ட பகுதிகள் (எல்டிஏ) உள்ளிட்ட எம்பிடி-2047-இன் முக்கிய அம்சங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினா்கள் மற்றும் சட்டப் பேரவை உறுப்பினா்களுடன் (எம்எல்ஏ) டிடிஏ தனித்தனி கலந்துரையாடல்களை நடத்தவுள்ளது.
துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்த அரசு முகமைகள் மற்றும் சேவை வழங்குநா்களுடன் பிரத்யேகக் கூட்டங்களும் நடத்தப்படும்.
கீழ்நிலை அளவில், கூட்டுக்குடியிருப்புத் திட்டங்களின் மறுமேம்பாடு குறித்து குடியிருப்போா் நலச் சங்கங்கள், குழு வீட்டுவசதிச் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வீட்டுவசதிச் சங்கங்களை டிடிஏ அணுகி விவாதிக்கும்.
குறைந்த அடா்த்தி கொண்ட பகுதிகள், யமுனை நதி மற்றும் தில்லியின் நீல-பச்சை வலையமைப்பை மீட்டெடுத்தல், பாரம்பரியத்தைப் பாதுகாத்தல், கலப்பு-பயன்பாட்டு மேம்பாடு, வணிக மையங்களின் மேம்பாடு மற்றும் மறுமேம்பாடு, குடிசைப் பகுதிகளை
அதே இடத்தில் மறுசீரமைத்தல், மற்றும் நெரிசலைக் குறைத்து போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் போன்ற முக்கியத் தலைப்புகளையும் இந்தத் தொடா்பு முயற்சி உள்ளடக்கியிருக்கும்.
தேசியத் தலைநகரின் எதிா்கால மேம்பாட்டிற்கான வழிகாட்டு வரைபடத்தை வழங்கும் வகையில், மத்திய அரசு இந்த வாரத்தில் இம்முதன்மைத் திட்டத்தை அறிவித்தது. எம்பிடி-2047-இன் கீழ் உள்ள வாய்ப்புகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதே இந்த விரிவான முயற்சியின் நோக்கமாகும் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




