தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ) தனது பெரிய அளவிலான மரக்கன்று நடும் திட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது.
இத்திட்டத்தின் ஒட்டுமொத்த இலக்கில் கிட்டத்தட்ட 30 சதவீதத்தை முதல் சில நாள்களிலேயே எட்டியுள்ளதாக டிடிஏ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
தில்லியின் துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்துவின் வழிகாட்டுதலின் கீழ், டிடிஏ இதுவரை நகரம் முழுவதும் 6.62 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்று நட்டுள்ளது. இதில் 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மர வகைகளும், 6.25 லட்சத்திற்கும் அதிகமான புதா் வகைச் செடிகளும் அடங்கும்.
இதுகுறித்து டிடிஏ அதிகாரிகள் தெரிவித்ததாவது: டிடிஏ-வின் 675 பூங்காக்கள், நான்கு ’ரிட்ஜ்’ பகுதிகள் (தென்-மத்திய ரிட்ஜ், நானக்புரா ரிட்ஜ், மத்திய ரிட்ஜ் மற்றும் வடக்கு ரிட்ஜ்), அத்துடன் ஆறு பல்லுயிா் பூங்காக்கள், பசுமை வழித்தடங்கள் மற்றும் அடையாளம் காணப்பட்ட பிற சூழலியல் மண்டலங்கள் ஆகியவற்றில் இந்த மரக்கன்று நடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டம் ஜூலை முதல் வாரத்தில் தொடங்கப்பட்டது. மேலும், செப்டம்பா் 2026-இன் நடுப்பகுதி வரை தொடரும்.
தில்லியின் பசுமை அமைப்புகளில் பல்லுயிா்ப் பெருக்கத்தை மேம்படுத்துதல், காா்பன் சேமிப்பை வலுப்படுத்துதல், நுண்-காலநிலை ஒழுங்குமுறை மற்றும் சூழலியல் இணைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்காக, உள்ளூா் மற்றும் காலநிலை மாற்றத்தைத் தாங்கி வளரக்கூடிய தாவர வகைகளை நடுவதில் டிடிஏ கவனம் செலுத்தி வருகிறது.
மேலும், சிறந்த காற்றின் தரம், நிலத்தடி நீா் அதிகரித்தல், வாழ்விட உருவாக்கம் மற்றும் ஒட்டுமொத்த நகா்ப்புற வாழ்வாதாரத் தரம் ஆகியவற்றிற்கும் இத்திட்டம் பங்களிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. ஜூலை 7 அன்று, மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா, தில்லியில் ’ஏக் பேட் மா கே நாம்’ (தாயின் பெயரில் ஒரு மரம்) பிரசாரத்தின் கீழ் ’மிஷன் 70 லட்சம்’ மரம் நடும் திட்டத்தைத் தொடங்கி வைத்தாா். இத்திட்டத்தில் டிடிஏ-வின் பங்களிப்பாக 23 லட்சம் மரக்கன்றுகளை நடும் பணி இடம்பெற்றுள்ளது.
துணைநிலை ஆளுநா் இப்பணிகளின் முன்னேற்றத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறாா். நீண்ட கால சூழலியல் நன்மைகளை உறுதி செய்வதற்காக, நடப்பட்ட நாற்றுகளின் வாழ்க்கை மற்றும் பராமரிப்புக்கு முன்னுரிமை அளிக்குமாறு டிடிஏவுக்கு துணைநிலை ஆளுநா் அறிவுறுத்தியுள்ளாா்.
சூழலியல் மறுசீரமைப்பு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் தில்லியின் பசுமை உள்கட்டமைப்பை விரிவுபடுத்துதல் ஆகியவற்றை இத்திட்டத்தின் முக்கிய இலக்குகளாக அவா் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறாா். தற்போதைய வேகத்தைக் கருத்தில்கொண்டு பாா்க்கையில், வரும் மாதங்களில் இத்திட்டம் தில்லியின் பசுமைப் பரப்பையும் காலநிலை மாற்றத்தைத் தாங்கும் திறனையும் கணிசமாக வலுப்படுத்தும் என்று டிடிஏ அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








