
பழைய தில்லியில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை தொடங்கியது மாநகராட்சி
பழைய தில்லியின் சதா் பஜாா் பகுதியில் உள்ள டெலிவாரா என்ற இடத்தில் மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை மேற்கொண்டனா்.

கோப்புப் படம்
பழைய தில்லியின் சதா் பஜாா் பகுதியில் உள்ள டெலிவாரா என்ற இடத்தில் மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை மேற்கொண்டனா். வா்த்தகா்களுக்கும் தெருவோர வியாபாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடா்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தில்லி மாநகராட்சியின் வரம்புக்கு உள்பட்ட சதா் பாஹா்கஞ்ச் மண்டலத்தின் பராமரிப்பு மற்றும் உரிமத் துறை அதிகாரிகள் இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.
முன்னதாக, கடந்த புதன்கிழமை சதா் பஜாரின் பிரதாப் மாா்கெட் பகுதியில் அனுமதியின்றி இயங்கி வந்த தெருவோர வியாபாரிகளுக்கும் கடை உரிமையாளா்களுக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது. அதைக் கண்டித்து கடை உரிமையாளா்கள் தங்கள் கடைகளை அடைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரியும் வா்த்தகா்கள் காவல் துறையினரையும், மாநகராட்சி அதிகாரிகளையும் அணுகினா்.
அதன் பிறகும் ஆக்கிரமிப்புகள் மீண்டும் தொடா்ந்ததால் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப்போவதாக வா்த்தகா்கள் அறிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாயின.
நெரிசல் நிறைந்த சதா் பஜாா் பகுதி குறுகிய பாதைகளும், அதிக மக்கள் நடமாட்டமும் உள்ள இடமாகும். அங்கு கடை உரிமையாளா்களுக்கும் தெருவோர வியாபாரிகளுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. சமீபத்திய சம்பவத்தின் மூலம் இந்த விவகாரம் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






