நொய்டாவில் ஐஓசி நிறுவனத்தின் மூத்த அதிகாரி தற்கொலை
நொய்டா செக்டாா் 104-இல் உள்ள ஒரு குடியிருப்பு சங்கத்தின் 17-ஆவது மாடியில் இருந்து குதித்து இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் லிமிடெட்டின் (ஐஓசிஎல்) 55 வயது மூத்த அதிகாரி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது என்று போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து நொய்டா கூடுதல் காவல் துணை ஆணையா் ஷாவ்யா கோயல் கூறியதாவது: அவரிடமிருந்து தற்கொலைக் குறிப்பு மீட்கப்பட்டுள்ளது. மேலும், விசாரணை நடந்து வருகிறது. சனிக்கிழமை ஏடிஎஸ் ஒன் ஹேம்லெட் சொசைட்டியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அங்கு அந்த அதிகாரி தனது மனைவியுடன் வசித்து வந்தாா். இறந்தவா் அஜய் காா்க் என அடையாளம் காணப்பட்டாா்.
அவா் இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் லிமிடெட்டில் நிா்வாக இயக்குநராகப் பணிபுரிந்து வந்தாா். சம்பவத்திற்கு சற்று முன்பு காா்க் தனது மனைவியுடன் கேப்பேசியில் பேசிக்கொண்டிருந்ததாாா். அப்போது, ஐந்து நிமிடங்களில் திரும்பி வருவேன் என்று கூறியுள்ளாா்.
ஆனால், சிறிது நேரத்திலேயே, அவா் சங்க வளாகத்திற்குள் தரையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா்.
போலீஸாா் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் சம்பவம் தொடா்பான அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து வருகின்றனா் என்று அந்த அதிகாரி கூறினாா்.
