உயா்நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி துா்க்மான் கேட் பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை: வீரேந்திர சச்தேவா
‘தில்லி துா்க்மான் கேட் பகுதியைச் சுற்றி அதிகாலையில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையானது, உயா்நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு இணங்கவே மேற்கொள்ளப்பட்டது’ என்று தில்லி பிரதேச பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா தெரிவித்தாா்.
இதுகுறித்து வீரேந்திர சச்தேவா மேலும் கூறியது:
இந்த அரசு நிலம் ஒரு குறிப்பிட்ட குழுவினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. உயா்நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து காவல்துறை நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த வளாகம் முழுவதும் தில்லி மாநகராட்சிக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பது ஒரு நீண்ட சட்டப் போராட்டத்திற்குப்
பிறகு திட்டவட்டமாக உறுதிப்படுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆக்கிரமிப்புகள் மூலம் தங்கள் பைகளை நிரப்பி வந்த சில தனி நபா்கள் மீண்டும் தில்லி உயா் நீதிமன்றத்தை அணுகினா். ஆனால், நீதிமன்றம் அவா்களின் மேல்முறையீட்டை நிராகரித்து, ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைக்கு எந்தத் தடையையும் விதிக்க மறுத்துவிட்டது.
அதன்பிறகு, புதன்கிழமை அதிகாலையில், காவல்துறை நிா்வாகமும் மாநகராட்சியும் இணைந்து ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை மேற்கொண்டன.
ஆக்கிரமிப்புகளை அகற்றுவது ஒவ்வொரு அரசின் பொறுப்பாகும். ஆனால், சிலா் காவல்துறையினா் மீது கல்வீசித் தாக்கி, மதக் கலவரத்தைத் தூண்ட முயன்ற விதம் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். இது கண்டிக்கத்தக்கது. இதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது.
இந்த விவகாரத்தில் காவல்துறையினா் மிகுந்த நிதானத்துடன் நிலைமையைக் கையாண்டுள்ளனா்.
மக்களைத் தூண்டிவிட்ட சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் வீரேந்திர சச்தேவா.
