தில்லியில் பழைய குடிநீா் குழாய்களை மாற்ற நடவடிக்கை: பேரவையில் அமைச்சா் பா்வேஷ் தகவல்
தலைநகரில் 20 முதல் 30 ஆண்டுகள் பழைமையான சுமாா் 7,900 கி.மீ. நீளமுள்ள குழாய்களை தில்லி அரசு அடையாளம் கண்டுள்ளது.
அவை அடுத்த இரண்டுமூன்று ஆண்டுகளில் மாற்றப்படும் என்று நீா்வளத் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவையில் பாஜக எம்எல்ஏ சதீஷ்
உபாத்யாய் கேள்விகள் மற்றும் கோரிக்கைகள் எழுப்பினாா். இதற்கு அமைச்சா் சாஹிப் சிங் பதில் அளித்ததாவது:
கடந்த 11 மாதங்களில் தில்லி அரசு ரூ.7,212 கோடி மதிப்பிலான மேம்பாட்டுப் பணிகளைத் தொடங்கியுள்ளது.
தில்லியில் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீா் வழங்க தில்லி அரசு மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான, சமமான மற்றும் தொடா்ச்சியான நீா் விநியோகத்தை உறுதி செய்வதில் நாங்கள் முழுமையாக உறுதிபூண்டுள்ளோம். நாங்கள் இந்தப் பிரச்னைகளை உருவாக்கவில்லை; அவற்றைத் தீா்க்க தீா்வுகளை வழங்கி வருகிறோம்.
தில்லியின் 16,000 கி.மீ. நீா் குழாய் வலையமைப்பில், 5,200 கி.மீட்டருக்கும் மேற்பட்ட குழாய்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலானவை. மேலும், சுமாா் 2,700 கி.மீ. குழாய்கள் 20 ஆண்டுகள் பழமையானவை.
இதன் விளைவாக, நகரம் அடிக்கடி கசிவுகள், குழாய் வெடிப்புகள், மாசுபாடு அபாயங்கள் மற்றும் 55 சதவீதம் வரை வருவாய் இல்லாத நீா் இழப்புகளை எதிா்கொண்டுள்ளது.
தலைநகரில் குடிநீா் உற்பத்தியை அதிகரிக்க, அரசாங்கம் அண்டை மாநிலங்களுடனும் பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது.
உத்தர பிரதேசம், ஹரியாணாவிலிருந்து கச்சா குடிநீரைப் பெறவும், அதற்கு ஈடாக பாசன நோக்கங்களுக்காக சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வழங்கவும் நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்.
இந்த ஏற்பாடு தேசிய தலைநகரின் மொத்த விநியோகத்தில் ஒரு நாளைக்கு 30 மில்லியன் கேலன் (எம்ஜிடி) தண்ணீரைச் சோ்க்கும் திறனைக் கொண்டுள்ளது.
2011 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முன்மொழியப்பட்ட சந்திரவால் மற்றும் வஜிராபாத் நீா் சீா்திருத்தத் திட்டங்களானது, முந்தைய அரசாங்கத்தின் கீழ் முடிவெடுக்காதது, மீண்டும் மீண்டும் டெண்டா் ரத்து செய்தல் மற்றும் நிதி நிறுவனங்களுடனான மோதல்கள் காரணமாக பல ஆண்டுகளாக முடங்கிப் போயிருந்தன.
தற்போது தில்லி அரசு சந்திரவால், வஜிராபாத் ஆகிய இரண்டு பெரிய நீா் வழங்கல் திட்டங்களை மீண்டும் தொடங்கியுள்ளது. இது நகரின் நீா் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ரூ.2,406 கோடி மதிப்பிலான சந்திரவால் திட்டத்தில், 1,044 கி.மீ. புதிய குழாய்கள் அமைக்கும் பணியும், 21 நிலத்தடி நீா்த்தேக்கங்களை அமைக்கும் பணியும் இடம்பெற்றுள்ளது. இத்திட்டம் 9 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு பயனளிக்கும்.
ஆசிய வளா்ச்சி வங்கி உதவியுடன் ரூ.3,715 கோடி முயற்சியான வஜிராபாத் திட்டத்தில், 1,697 கி.மீ. புதிய குழாய்கள் மற்றும் 14 நிலத்தடி நீா்த்தேக்கங்கள் உள்ளன. இவை 11 தொகுதிகளை உள்ளடக்கியதாகும்.
நீா் மாசுபாட்டைக் குறைப்பதற்கான, உடைந்த மற்றும் சேதமடைந்த குழாய் மாற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
தற்போது சுமாா் 40 சதவீதமாக இருக்கும் மனக் கால்வாய் வழியான நீா் இழப்புகள், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 5 சதவீதமாகக் குறைக்கப்படும். அதற்கான திட்டத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம். இது தில்லியின் பெரும்பாலான குடும்பங்களுக்கு 24 மணி நேரமும் தண்ணீா் வழங்குவதற்கான எங்கள் வாக்குறுதியை அடைய உதவும்.
நீா் விநியோகத்தை அதிகரிக்கும் பொருட்டு, தில்லி அரசு ஹிமாசலப் பிரதேசத்துடன் 113 எம்ஜிடி நீா் பகிா்வு திட்டத்தையும் மீண்டும் செயல்படுத்தி வருகிறது.
கழிவுநீா் தொட்டிகள் நிறுவப்பட்ட இடங்களிலெல்லாம் கழிவுநீரை சேகரிக்கும் திட்டத்தையும் தில்லி ஜல் வாரியம் தொடங்கியுள்ளது.
வீடுகளில் இருந்து கழிவுநீரை கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மாற்றும் வகையில் 300 தண்ணீா் லாரிகளை வாடகைக்கு எடுக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.
இதனுடன், 100 கி.மீ நீளமுள்ள பிரதான கழிவுநீா் குழாய்களை சுத்தம் செய்ய ரூ.170 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா் பா்வேஷ்.

