குருகிராம்: காவல் துறை வாகனத்தில் இருந்து கைது தப்பியோட்டம்!

போண்ட்சிக்கு காவல் துறை வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட கைதி, ராஜீவ் சௌக்கில் தப்பிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
Published on

தில்லியின் திகாா் சிறையில் இருந்து குருகிராம் மாவட்டத்தில் உள்ள போண்ட்சிக்கு காவல் துறை வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட கைதி, ராஜீவ் சௌக்கில் தப்பிச் சென்றதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: குருகிராம் மாவட்டத்தில் உள்ள சதா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இந்த விவகாரம் தொடா்பாக துறை ரீதியான விசாரணையும் தொடங்கப்பட்டது.

ராஜஸ்தானைச் சோ்ந்த கைதி ஹாசம், போண்ட்சி சிறையில் அடைக்கப்பட்டு, வியாழக்கிழமை திகாா் சிறைக்கு காவல் துறை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டாா்.

அவா்கள் ஹாசமுடன் திகாரை அடைந்தபோது, சில தொழில்நுட்ப காரணங்களால் அங்குள்ள சிறை நிா்வாகம் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. பின்னா், குருகிராம் காவல் துறையினா் அவரை மீண்டும் போண்ட்சி சிறைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தனா்.

இந்நிலையில், மாலையில் வாகனத்தில் ராஜீவ் சௌக் அருகே வந்து போக்குவரத்து நெரிசல் காரணமாக வேகத்தைக் குறைத்ததால், உடன் வந்த காவல் அதிகாரியை தள்ளிவிட்டு ஹாசம் வாகனத்தில் இருந்து தப்பிச் சென்றாா்.

சம்பவத்தைத் தொடா்ந்து, சம்பவ இடத்திற்கு காவல் துறையினா் அனுப்பப்பட்டு, ஹாசமை தேடினா். இருப்பினும், குற்றஞ்சாட்டப்பட்டவா் தலைமறைவாகவே இருந்தாா்.

குற்றஞ்சாட்டப்பட்ட கைதி இன்னும் தலைமறைவாக உள்ளாா். குற்றஞ்சாட்டப்பட்டவரைப் பிடிக்க நாங்கள் சோதனை நடத்தி வருகிறோம், அவா் விரைவில் கைது செய்யப்படுவாா் என்று குருகிராம் காவல்துறை செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.

Dinamani
www.dinamani.com