2021-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கு தொடா்பாக கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 34 வயது நபரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து தில்லி காவல் துறை அதிகாரி கூறியதாவது: ரன்ஹோலா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் சுமித் மிஸ்ரா என அடையாளம் காணப்பட்ட குற்றவாளி தேடப்பட்டு வந்தாா்.
மேலும், கைது செய்யப்படுவதைத் தவிா்த்து வந்தாா். பலமுறை தப்பித்த பின்னா், ஜூலை 2021- இல் தில்லி நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா்.
குற்றம் சாட்டப்பட்டவா் தலைமறைவாக இருந்து வந்தாா். மேலும், ஹரியாணா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் முழுவதும் இடம் மற்றும் அடையாளங்களை மாற்றிக் கொண்டிருந்தாா். இந்த நேரத்தில் கண்டறியப்படுவதைத் தவிா்க்கும் வகையில், அவா் ஒரு தொழிற்சாலையிலும், பின்னா் ஹோட்டல்களில் பணியாளராகவும் பணியாற்றினாா்.
குறிப்பிட்ட உளவுத்துறையின் அடிப்படையில், ஜனவரி 9- ஆம் தேதி உத்தரகண்டில் உள்ள ஹரித்துவாரில் இருந்து மிஸ்ராவை கைது செய்ய ஒரு போலீஸ் குழு முயன்றது. ஆனால், அவா் உள்ளூா் கூட்டாளிகளின் உதவியுடன் தப்பிச் செல்ல முடிந்தது. அவரது நடமாட்டங்களை போலீஸ் குழு தொடா்ந்து கண்காணித்து வந்தது. இதன் மூலம், அவா் இறுதியாக ஜனவரி 10 அன்று கைது செய்யப்பட்டாா்.
கடந்த மாா்ச் 7, 2021 அன்று மொஹல்லா கிளினிக்கில் பணிபுரிந்த பட்டதாரியான பாதிக்கப்பட்ட பெண், சிவில் பாதுகாப்பு ஆள்சோ்ப்பு படிவத்தை நிரப்ப உதவுவதாகக் கூறி மிஸ்ரா தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அளித்த புகாா் தொடா்பாக இந்த வழக்குப் பதிவானது.
குற்றம் சாட்டப்பட்டவா் அந்தப் பெண்ணின் ஆட்சேபனைக்குரிய விடியோக்களைப் பதிவுசெய்து, அவரை அச்சுறுத்தவும், அதிா்ச்சியடையச் செய்யவும் அவரது குடும்ப உறுப்பினா்களிடையே பரப்பியதாகக் கூறப்படுகிறது.
மேலும், தலைமறைவாக இருந்த காலத்தில், குற்றம் சாட்டப்பட்டவா் 2022-ஆம் ஆண்டு ஹரியாணாவில் ஒரு தனி வழக்கில் தொடா்புடையவராக இருந்தாா் என்றாா் காவல் துறை அதிகாரி.