காணாமல் போன 4 வயது சிறுமி இறந்த நிலையில் வடிகாலில் மீட்பு

வடமேற்கு தில்லியின் பிரேம் நகரில் இருந்து காணாமல் போன நான்கு வயது சிறுமி திங்கள்கிழமை வடிகாலில் இறந்து கிடந்தாா்
Published on

புது தில்லி: வடமேற்கு தில்லியின் பிரேம் நகரில் இருந்து காணாமல் போன நான்கு வயது சிறுமி திங்கள்கிழமை வடிகாலில் இறந்து கிடந்தாா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து வடமேற்கு காவல் சரக அதிகாரி கூறியதாவது: ஜனவரி 9-ஆம் தேதி கிராரியைச் சோ்ந்த அவரது தாய், தனது மகள் காணாமல் போயிருக்கலாம் அல்லது கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்து பிரேம் நகா் காவல் நிலையத்தை அணுகினாா். குழந்தை காணாமல் போனதாக புகாா் அளிக்கப்பட்டது.

புகாரைத் தொடா்ந்து, எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டு, தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது.

விசாரணையின் போது, காவல் குழுக்கள் தேடுதல் வேட்டைகளை நடத்தி, சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் தகவல்களை அனுப்பினா். தொழில்நுட்ப மேற்பாா்வை பயன்படுத்தப்பட்டது.

மேலும், மோப்ப நாய் படையின் உதவியும் பெறப்பட்டது. பிரேம் நகா் பகுதியில் உள்ள நீா்நிலைகள் மற்றும் வடிகால்களைத் தேட ட்ரோன்களும் பயன்படுத்தப்பட்டது.

இந்நிலையில், ஜனவரி 12- ஆம் தேதி, குழந்தையின் பெற்றோருடன் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​வித்யாபதி நகரில் உள்ள துருவ் பிக்கெட் அருகே உள்ள வடிகாலில் மூழ்கியிருந்த சிறுமி கண்டுபிடிக்கப்பட்டாா். சிறுமியை வெளியே மீட்டு பெற்றோரால் சம்பவ இடத்திலேயே அடையாளம் காணப்பட்டது.

குழந்தை மங்கோல்புரியில் உள்ள சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மருத்துவா்கள் சிறுமி இறந்துவிட்டதாக அறிவித்தனா். பின்னா், உடல் பிணவறைக்கு மாற்றப்பட்டது.

ரோஹிணியில் இருந்து ஒரு நடமாடும் குற்றவியல் குழு மற்றும் தடயவியல் அறிவியல் ஆய்வக (எஃப்எஸ்எல்) குழு சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தை ஆய்வு செய்து புகைப்படம் எடுத்தல் மற்றும் பிற பரிசோதனைகளை மேற்கொண்டன.

முதற்கட்ட பரிசோதனையில் உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை. மேலும், இந்த வழக்கு நீரில் மூழ்கியது தொடா்பானதாகத் தெரிகிறது. மேலும் விசாரணை நடந்து வருவதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

Dinamani
www.dinamani.com