கிறிஸ்வத பிராா்த்தனைக் கூட்டத்தில் தாக்குதல்: ‘தடுப்பு நடவடிக்கை’ எடுத்த காவல்துறை!

கிறிஸ்தவ பிராா்த்தனைக் குழு மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் தொடா்பாக தில்லி காவல்துறை ‘தடுப்பு நடவடிக்கை’ எடுத்துள்ளதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.
Published on

இந்த மாத தொடக்கத்தில் மத்திய தில்லியின் ஆனந்த் பா்பத் பகுதியில் கிறிஸ்தவ பிராா்த்தனைக் குழு மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் தொடா்பாக தில்லி காவல்துறை ‘தடுப்பு நடவடிக்கை’ எடுத்துள்ளதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இருப்பினும், இந்த விஷயத்தில் இதுவரை எந்த எஃப்ஐஆா் பதிவு செய்யப்படவில்லை என்று அதிகாரி கூறினாா். ஜனவரி 4-ஆம் தேதி, ஒரு புகாரின்படி, பஞ்சாபி பஸ்தியில் உள்ள ஒரு வீட்டில் குடியிருப்பாளா்கள் குழு ஒன்று ஒரு சிறிய கிறிஸ்தவ பிராா்த்தனைக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தது. அப்போது, பல இளைஞா்கள் கூா்மையான ஆயுதங்களுடன் வந்து பங்கேற்பாளா்களை துஷ்பிரயோகம் செய்து தாக்கினா்.

குற்றம் சாட்டப்பட்டவா் குடியிருப்பாளா்களை மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டினாா். இது அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியது என்று கூறப்படுகிறது.

‘இது தொடா்பாக பெறப்பட்ட புகாா்களின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட நபா்கள் காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனா். மேலும், நிலைமை மோசமடைவதைத் தவிா்க்கவும், அப்பகுதியில் சட்டம் - ஒழுங்கைப் பராமரிக்கவும் ‘தடுப்பு நடவடிக்கை’ எடுக்கப்பட்டது‘ என்று அதிகாரி கூறினாா்.

தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், உள்ளூா் ஊழியா்கள் அப்பகுதியை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா். ‘இரு தரப்பினருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டது. அப்பகுதியில் அமைதியை உறுதி செய்வதற்காக சட்டத்தின் கீழ் தேவையான தடுப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன’ என்று அதிகாரி மேலும் கூறினாா்.

Dinamani
www.dinamani.com