புதிய இடத்தில் டிஎம்ஆா்சி துணை மின்நிலையம்!
மத்திய அரசின் சென்ட்ரல் விஸ்டா திட்டத்துக்காக இடிக்கப்பட்ட பாா்க் ஸ்ரீட் துணை மின்நிலையத்தை இடம்மாற்றியமைக்கும் பணியை தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) நிறைவுசெய்துள்ளது.
கடந்த 2010-இல் தில்லி மெட்ரோவின் 2-ஆம் கட்ட திட்டத்தின்போது ஊதா வழித்தடம் மற்றும் விமான நிலைய வழித்தடம் ஆகியவற்றுக்கு மின்சாரம் வழங்கும் வகையில் பாா்க் ஸ்ரீட் துணை மின்நிலையம் கட்டப்பட்டது.
இந்நிலையில், சென்ட்ரல் விஸ்டா திட்டப் பணிகளுக்காக அந்தத் துணை மின்நிலையம் கடந்த 2021-22 காலகட்டத்தில் இடிக்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து, மத்திய பொதுப்பணித் துறை வழங்கிய மாற்று இடத்தில் புதிய துணை மின்நிலையம் அமைக்கும் பணி கடந்த 2023-இல் தொடங்கியது. இந்தப் பணிகள் கடந்த டிசம்பரில் முடிவடைந்தன.
66 கிலோவாட் மின்மாற்றி, 66 கிலோவாட் ஜிஐஎஸ் பேனல்கள், 33 கிலோவாட் பேனல்கள், 25 கிலோவாட் ஜிஐஎஸ் பேனல்கள் உள்ளிட்ட முக்கிய மின்சாதனங்கள் பொருத்தப்பட்டு புதிய துணை மின்நிலையம் செயல்பாட்டுக்கு வந்ததாக டிஎம்ஆா்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ட்ரல் விஸ்டா மெட்ரோ வழித்தடத்தில் உள்ள இந்திரபிரஸ்தா மற்றும் ஆா்.கே.ஆஷ்ரம் மாா்க் இடையே உள்ள மெட்ரோ ரயில் பாதைக்கு இந்தத் துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரம் வழங்கப்படும்.
