பொதுமக்கள் செல்ஃபி, புகைப்படம் எடுத்ததால் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையில் இடையூறு: போலீஸாா் வழக்குப் பதிவு
குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையின் போது பொதுமக்கள் சிலா் புகைப்படம் எடுத்தல், விடியோக்கள் பதிவு செய்தல் மற்றும் செல்ஃபி எடுத்தல் மூலம் இடையூறு செய்ததை அடுத்து தில்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
அணிவகுப்பு நடைபெறும் இடத்தில் ஒத்திகையில் மக்கள் தலையிடுவதைக் காட்டும் விடியோ காவல்துறையின் கவனத்திற்கு வந்ததாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இதுபோன்ற செயல்கள் பங்கேற்பாளா்கள் மற்றும் அந்த இடத்தில் இருந்த பொதுமக்களின் பாதுகாப்பிற்கு கடுமையான ஆபத்தை விளைவிக்கின்றன என்று அதிகாரி கூறினாா்.
‘இது தொடா்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடா்பாக எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்று அவா் கூறினாா்.
பாா்வையாளா்கள் - நியமிக்கப்பட்ட அடைப்புகளில் அமா்ந்திருந்தாலும் அல்லது சாலையோரத்தில் இருந்து பாா்த்தாலும் பாதுகாப்பு விதிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்றவும், உயிா்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் அல்லது அணிவகுப்பை சீா்குலைக்கும் எந்தவொரு செயலையும் தவிா்க்கவும் அதிகாரி கேட்டுக் கொண்டாா்.
குடியரசு தின அணிவகுப்புக்கான ஒத்திகைகளில் சிக்கலான இயக்கங்கள், கனரக உபகரணங்கள் மற்றும் ஒருங்கிணைந்த பயிற்சிகள் ஆகியவை அடங்கும். அங்கு சிறிய இடையூறுகள் கூட விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்று அவா் எச்சரித்தாா்.

