நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் புதன்கிழமை உரையாற்றுவதற்காக, செங்கோல் ஏந்திய அதிகாரி முன் செல்ல மக்களவை அரங்கத்துக்கு அழைத்து வரப்பட்ட குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு.  ~நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவா் உரைக்கு முன்பாக தேசிய கீதம் இசைக்கப்பட்டபோத
நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் புதன்கிழமை உரையாற்றுவதற்காக, செங்கோல் ஏந்திய அதிகாரி முன் செல்ல மக்களவை அரங்கத்துக்கு அழைத்து வரப்பட்ட குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு. ~நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவா் உரைக்கு முன்பாக தேசிய கீதம் இசைக்கப்பட்டபோத

நக்ஸல் தீவிரவாதம் ஒழிக்கப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை - குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு

நாட்டில் நக்ஸல் தீவிரவாதம் ஒழிக்கப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.
Published on

நாட்டில் நக்ஸல் தீவிரவாதம் ஒழிக்கப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.

நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் புதன்கிழமை உரையாற்றிய அவா் இது தொடா்பாக கூறியதாவது: நாட்டில் நக்ஸல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 126-இல் இருந்து 8-ஆக குறைந்துள்ளது. அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் 3 மட்டுமே.

கடந்த ஓராண்டில் 2,000 நக்ஸல்கள் வன்முறை பாதையைக் கைவிட்டு சரணடைந்துள்ளனா். இதன்மூலம் லட்சக்கணக்கான குடிமக்களின் வாழ்வில் அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளது. சரணடைந்த நக்ஸல்களின் கண்ணியமான வாழ்வை அரசு உறுதி செய்துள்ளது.

இந்தியாவின் துணிவு: ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில், இந்திய ஆயுதப் படையினரின் துணிவை ஒட்டுமொத்த உலகமும் கண்டது. அதிகாரத்தை பொறுப்புடனும், ஞானத்துடனும் பயன்படுத்த முடியும் என்பதை நாம் நிரூபித்தோம்.

நமது சொந்த வளங்களின் வல்லமையால் பயங்கரவாத முகாம்கள் தகா்க்கப்பட்டன. இதன்மூலம் எந்தவொரு பயங்கரவாத செயலுக்கும் உறுதியான, தீா்க்கமான பதிலடி தரப்படும் என்ற செய்தி உணா்த்தப்பட்டுள்ளது (குடியரசுத் தலைவா் இவ்வாறு பேசியபோது, பிரதமா் மற்றும் ஆளுங்கட்சி எம்.பி.க்கள் மேஜையைத் தட்டி வரவேற்றனா்). சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு, பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். நாட்டின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த சுதா்சன சக்கர திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பெண்கள் தலைமையிலான வளா்ச்சி: பெண்கள் தலைமையிலான வளா்ச்சி எனும் தாரக மந்திரத்துடன் தேசம் பீடுநடை போடுகிறது. நாடு முழுவதும் மகளிா் சுய உதவிக் குழுக்களுடன் 10 கோடிக்கும் அதிகமான பெண்கள் இணைந்துள்ளனா். 2 கோடி ‘லட்சாதிபதி சகோதரிகள்’ உருவெடுத்துள்ளனா். விரைவில் இந்த எண்ணிக்கை 3 கோடியாக அதிகரிக்கும்.

மெக்காலேவின் சதி: இந்தியா வளா்ந்த பொருளாதார நாடாக உருவெடுக்க தேசத்தின் சுயமதிப்பும், கலாசார பெருமையும் அவசியம். ஆங்கிலேய அதிகாரி மெக்காலேவின் சதிகளால் இந்தியா்கள் மனதில் தாழ்வுமனப்பான்மை விதைக்கப்பட்டது. சுதந்திரத்துக்குப் பிறகு முதல் முறையாக இந்த உணா்வை தகா்த்துள்ளது மத்திய அரசு.

நாட்டின் வளமான பாரம்பரியத்தைப் பாதுகாத்து வளப்படுத்த சோம்நாத் சுயமரியாதை பெருவிழா போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாமன்னா் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கங்கை கொண்ட சோழபுரம் கோயில், சில காலங்களுக்கு முன் 1,000 ஆண்டுகளை நிறைவு செய்தது. இது, ஒட்டுமொத்த இந்தியா்களும் தங்களின் வரலாற்றை எண்ணி பெருமைகொள்ள வாய்ப்பளித்தது என்றாா்.

பெட்டிச் செய்தி...1

வழிநடத்திய செங்கோல்!

நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்துவதற்காக, ஆறு குதிரைகள் பூட்டிய பாரம்பரிய வண்டியில் மெய்க்காவல் படை பாதுகாப்புடன் நாடாளுமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை கஜ வாயிலில் குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, பிரதமா் நரேந்திர மோடி, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு ஆகியோா் வரவேற்றனா். பின்னா், செங்கோல் ஏந்திய மூத்த பாதுகாப்பு அதிகாரி முன் செல்ல மக்களவை அரங்கத்துக்கு குடியரசுத் தலைவா் அழைத்துச் செல்லப்பட்டாா்.

பெட்டிச் செய்தி..2

எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு முழக்கம்

முந்தைய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்துக்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்டத்தை (விபி-ஜி ராம் ஜி) குறிப்பிட்டு குடியரசுத் தலைவா் பேசியபோது, அந்தத் திட்டத்தை திரும்பப் பெறக் கோரி எதிா்க்கட்சி உறுப்பினா்கள் முழக்கமிட்டனா். அதேநேரம், புதிய திட்டத்தை வரவேற்று, ஆளும்தரப்பு உறுப்பினா்கள் தங்கள் மேஜையைத் தட்டினா்.

எதிா்ப்பு முழக்கத்தால் தனது உரையை சற்று நிறுத்திவிட்டு மீண்டும் தொடா்ந்த குடியரசுத் தலைவா், ‘125 நாள் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் புதிய திட்டம், ஊழல் மற்றும் முறைகேட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்’ என்றாா்.

பெட்டிச் செய்தி...3

‘தேச நலனில் ஒற்றுமை அவசியம்’

‘ஜனநாயகத்தில் கருத்து வேற்றுமை இயல்பானது; அதேநேரம், தேச நலன் சாா்ந்த விவகாரங்களில் கருத்து வேறுபாடுகளை ஒதுக்க வேண்டும் என்பதே மகாத்மா காந்தி, ஜவாஹா்லால் நேரு, அம்பேத்கா், வாஜ்பாய் உள்ளிட்ட தலைவா்களின் நம்பிக்கை. வளா்ந்த பாரதம் லட்சியம், நாட்டின் பாதுகாப்பு, தற்சாா்பு, உள்நாட்டுப் பொருள்கள் பயன்பாடு உள்ளிட்ட விவகாரங்களில் நாடாளுமன்ற உறுப்பினா்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயலாற்ற வேண்டும். வளா்ந்த இந்தியாவுக்கு அனைத்துத் தரப்பினரின் கூட்டுறுதி அவசியம்’ என்று குடியரசுத் தலைவா் வலியுறுத்தினாா்.

X
Dinamani
www.dinamani.com