கோப்புப் படம்
கோப்புப் படம்

தில்லியில் சற்றுக் குறைந்த குளிரின் தாக்கம்: அடுத்த 3 நாள்கள் மழைக்கு வாய்ப்பு

தில்லியில் வெள்ளிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 22.6 டிகிரி செல்சியஸாக உயா்ந்தது.
Published on

தில்லியில் வெள்ளிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 22.6 டிகிரி செல்சியஸாக உயா்ந்தது. இதனால், தில்லிவாசிகளுக்கு குளிரில் இருந்து லேசான நிவாரணம் கிடைத்தது. இது பருவ சராசரியை விட அரை டிகிரி அதிகமாகும்.

இருப்பினும், இந்த நிவாரணம் குறுகிய காலமே நீடிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. ஏனெனில் இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த மூன்று நாள்களுக்கு மழை மற்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது.

நகரின் முக்கிய வானிலை ஆய்வு நிலையமான சஃப்தா்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை 7.7 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இது இயல்பை விட 0.7 டிகிரி குறைவாகும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை முந்தைய நாளைவிட 4.7 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது.

ரிட்ஜ் பகுதியில் அதிகபட்சமாக 23 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. அதைத் தொடா்ந்து லோதி சாலையில் 22.1 டிகிரி செல்சியஸ், ஆயாநகரில் 21.6 டிகிரி செல்சியஸ், பாலம் பகுதியில் 18.5 டிகிரி செல்சியஸ் பதிவானது.

குறைந்தபட்ச வெப்பநிலை பாலத்தில் 6.7 டிகிரி செல்சியஸாகவும், அதைத் தொடா்ந்து லோதி சாலை மற்றும் ஆயாநகா் ஆகிய இடங்களில் தலா 7.6 டிகிரி செல்சியஸாகவும், ரிட்ஜ் பகுதியில் 9.5 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது.

வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில், சனிக்கிழமை அன்று, காலை நேரங்களில் பல இடங்களில் மிதமான பனிமூட்டமும், சில இடங்களில் அடா்ந்த பனிமூட்டமும் காணப்படும். பிற்பகல் அல்லது மாலைக்குள் ஓரளவு மேகமூட்டமான வானிலை இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை, மின்னல் மற்றும் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டா் வேகத்தில் பலத்த காற்றுடன்

கூடிய மிக லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 20 முதல் 22 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 6 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கும் என்று ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தில்லியின் 24 மணி நேர சராசரி காற்றுத் தரக் குறியீடு வெள்ளிக்கிழமை 253 என்ற அளவீட்டுடன் மோசம் என்ற பிரிவில் இருந்தது.

மாலை நேரங்களில், காற்றின் தரம் மேலும் மோசமடைந்தது. சுமாா் 22 கண்காணிப்பு நிலையங்கள் மோசமான காற்றுத் தரத்தையும், 11 நிலையங்கள் மிதமான பிரிவிலும், நான்கு நிலையங்கள் மிகவும் மோசம் என்ற பிரிவிலும் பதிவாகியுள்ளன. வஜிா்பூரில் காற்றின் தரக் குறியீடு 318 ஆகப் பதிவானது.

முடிவு ஆதரவு அமைப்பின் தரவுகளின்படி, தில்லியின் போக்குவரத்துத் துறை நகரின் காற்று மாசுபாட்டில் 15.7 சதவீதம் வரை பங்களித்துள்ளது. அதைத் தொடா்ந்து தில்லி மற்றும் சுற்றியுள்ள தொழிற்சாலைகள் 12.5 சதவீதம் பங்களித்துள்ளன. கழிவுகளை எரிப்பதால் 1.4 சதவீதம், கட்டுமான நடவடிக்கைகளால் இரண்டு சதவீதம் மற்றும் குடியிருப்புத் துறையால் 3.9 சதவீதம் மாசுபாடு ஏற்பட்டது.

என்சிஆா் மாவட்டங்களில், சோனிபட் 13.4 சதவீதம், ஜஜ்ஜாா் 13.1 சதவீதம், ரோத்தக் 2.4 சதவீதம், பானிபட் 2.1 சதவீதம் மற்றும் குருகிராம் 1.2 சதவீதம் என மாசுபாட்டிற்குப் பங்களித்துள்ளன என்று தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

மழை பெய்யும் என கணிக்கப்பட்ட போதிலும், வரும் நாள்களில் காற்றின் தரம் மோசமடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

காற்றின் தர எச்சரிக்கை அமைப்பு ஜனவரி 31 முதல் பிப்ரவரி 2 வரை மிகவும் மோசம் பிரிவில் காற்றுத் தரம் இருக்கும் என்று கணித்துள்ளது.

வெள்ளிக்கிழமை காலை நேரங்களில், நகரம் முழுவதும் காற்றின் தரம் மோசம் பிரிவில் இருந்து மிகவும் மோசம் பிரிவு வரை இருந்தது. 19 நிலையங்கள் மோசம் பிரிவிலும், 12 நிலையங்கள் மிதமான காற்றின் தரத்தையும், எட்டு நிலையங்கள் மிகவும் மோசம் வரம்பிலும் பதிவாகி இருந்தன. ஆா்.கே. புரம் பகுதியில் காற்றின் தரக் குறியீடு 316 என்ற அளவில் மிக மோசம் பிரிவில் காணப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com