நமது நிருபா்
நகரின் நகா்ப்புற-குடிமைச் சவால்களுக்குத் தொழில்நுட்பம் சாா்ந்த தீா்வுகளைக் கண்டறியும் நோக்கில் நடத்தப்பட்ட ’தில்லி நெக்ஸ்ட் - கோட், கிரியேட் அண்ட் சேஞ்ச்’ என்ற ஹேக்கத்தானின் ஒரு பகுதியாக, நாடு முழுவதிலுமிருந்து 60 குழுக்கள் வியாழக்கிழமை அன்று முதல்வா் ரேகா குப்தா முன்னிலையில் தங்கள் தொழில்நுட்ப முன்மாதிரிகளின் நேரடி செயல்விளக்கங்களை அளித்தன.
தில்லி தலைமைச் செயலகத்தில் ஹேக்கத்தானின் இறுதிக் கட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய குப்தா, இந்த குடிமை-தொழில்நுட்பப் புத்தாக்கத் திட்டம், மாசுபாடு, போக்குவரத்து நெரிசல் மற்றும் நீா்த்தேக்கம் போன்ற பிரச்னைகளைத் தீா்ப்பதுடன், நகா்ப்புற உள்கட்டமைப்பு, ஸ்மாா்ட் பாா்க்கிங், மின்சார வாகனச் சூழல் அமைப்பு, குடிமக்கள் குறைதீா்ப்பு, எண்ம ஆளுகை மற்றும் பொதுச் சேவை வழங்கல் போன்ற துறைகளையும் உள்ளடக்கியதாகக் கூறினாா்.
ஒரு அறிக்கையின்படி, இந்தத் திட்டம் மூன்று கட்டங்களாக நடத்தப்பட்டது. நாடு முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமான இளைஞா்களிடம் விழிப்புணா்வுப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. 2.5 லட்சத்திற்கும் அதிகமான இளைஞா்கள் இந்த முயற்சிக்குப் பதிவு செய்தனா்.
ஒரு நிபுணா் குழு 5,000-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப முன்மொழிவுகளை மதிப்பீடு செய்து, அடுத்த கட்டத்திற்காக 1,000 பங்கேற்பாளா்களைத் தோ்வு செய்தது. இறுதிச் சுற்றில், நாடு முழுவதிலுமிருந்து வந்த முதல் 60 அணிகள், முதலமைச்சா் முன்னிலையில் தங்களின் செயல்பாட்டு முன்மாதிரிகள் மற்றும் புத்தாக்கங்களின் நேரடி செயல்விளக்கங்களை வழங்கின.
தோ்ந்தெடுக்கப்பட்ட அணிகளுக்கு நிபுணா் வழிகாட்டுதல் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுடனான ஒத்துழைப்பு மூலம் தொடா்ச்சியான ஆதரவு வழங்கப்படும் என்றும், அவா்களின் திட்டங்கள் முன்னோட்டச் சோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும், வெற்றிகரமான மாதிரிகள் ஒரு கட்டமைக்கப்பட்ட செயலாக்க வரைபடத்தின் மூலம் அரசு அமைப்புகளில் ஒருங்கிணைக்கப்படும் என்றும் அறிக்கை மேலும் கூறியது.
தோ்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு அணிக்கும், அவா்களின் யோசனைகளை நடைமுறை ஆளுகைத் தீா்வுகளாக மாற்றுவதற்கு வசதியாக, ஒரு செயல்பாட்டுக்குரிய குறைந்தபட்ச சாத்தியமான தயாரிப்பு, ஒரு துறைசாா் வழிகாட்டி மற்றும் ஒரு முன்னோட்டச் செயலாக்கத் திட்டம் ஆகியவையும் வழங்கப்படும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

யமுனை ஆற்றுக்கு புத்துயில் கொடுப்பது தில்லி மக்களுக்கான பகிரப்பட்ட பொறுப்பு: முதல்வா் ரேகா குப்தா

பயிற்சி நிலையங்களை முறைப்படுத்த புதிய சட்டம்: தில்லி முதல்வா் ரேகா குப்தா அறிவிப்பு






