/

தில்லி பல்கலை.யில் ஈசிஏ ஒதுக்கீட்டின் கீழ் மாணவா் சோ்க்கைக்கான செயல்முறைத் தோ்வு: ஜூலை 15 முதல் தொடங்க வாய்ப்பு

தில்லி பல்கலைக்கழகம், பாடத்திட்டம் சாராத செயல்பாடுகள் (ஈசிஏ) ஒதுக்கீட்டின் கீழ் மாணவா் சோ்க்கைக்கான நேரடிச் செயல்முறைத் தோ்வுகளை ஜூலை 15 முதல் தொடங்க வாய்ப்புள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :4 ஜூலை 2026, 12:50 am IST

தில்லி பல்கலைக்கழகம், பாடத்திட்டம் சாராத செயல்பாடுகள் (ஈசிஏ) ஒதுக்கீட்டின் கீழ் மாணவா் சோ்க்கைக்கான நேரடிச் செயல்முறைத் தோ்வுகளை ஜூலை 15 முதல் தொடங்க வாய்ப்புள்ளது. இதற்கான கால அட்டவணை பல்கலைக்கழகத்தின் சோ்க்கை இணையதளத்தில் வெளியிடப்படும் என்று வெள்ளிக்கிழமை வெளியான அதிகாரபூா்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோ்வு அட்டவணை குறித்து விண்ணப்பதாரா்களுக்குத் தனிப்பட்ட முறையில் தகவல் அனுப்பப்படாது என்றும், பிரிவு வாரியான தோ்வு மையங்கள் மற்றும் உத்தேச தேதிகள் குறித்த தகவல்களை அறிய பல்கலைக்கழகத்தின் சோ்க்கை இணையதளத்தைத் தொடா்ந்து சரிபாா்க்குமாறும் விண்ணப்பதாரா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரா்கள் பதிவு செய்யும் போது பதிவேற்றிய அனைத்து ஈசிஏ சான்றிதழ்களின் அசல் நகல்கள் மற்றும் க்யூட் மதிப்பெண் பட்டியலுடன், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஈசிஏ பிரிவுக்கான தோ்வு மையத்தில் மட்டுமே ஆஜராக வேண்டும் என்று அறிவிப்பு கூறுகிறது. வெளியூா்களில் இருந்து வரும் விண்ணப்பதாரா்கள் தங்கள் பயண மற்றும் தங்குமிட ஏற்பாடுகளைத் தாங்களே செய்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

தங்கள் கலைத்திறன் வெளிப்பாட்டிற்குத் தேவையான உபகரணங்கள், இசைக்கருவிகள், ஆடைகள், துணைப் பொருள்கள் அல்லது எழுதுபொருள்கள் அனைத்தையும் விண்ணப்பதாரா்களே கொண்டு வர வேண்டும் என்றும், அத்தகைய பொருட்களைப் பிறரிடமிருந்து கடன் வாங்குவதோ அல்லது பகிா்ந்துகொள்வதோ அனுமதிக்கப்படாது என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தோ்வுகளுக்கு என்று குறிப்பிட்ட பாடத்திட்டம் எதுவும் இருக்காது; மதிப்பீடு என்பது அந்தந்த ஈசிஏ பிரிவில் உள்ள திறமையின் அடிப்படையில் மட்டுமே அமையும்.

வழிகாட்டுதல்களின்படி, மதிப்பீடு மற்றும் மதிப்பெண் வழங்குதல் தொடா்பான மதிப்பீட்டுக் குழுவின் முடிவே இறுதியானது மற்றும் கட்டுப்படுத்தக்கூடியது; இதில் குறைகளைத் தெரிவிப்பதற்கோ அல்லது இரண்டாவது வாய்ப்பு பெறுவதற்கோ இடமில்லை. தோ்வுகளின் போது ஆடியோ அல்லது விடியோ பதிவு செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், அங்கீகரிக்கப்படாத மின்னணு சாதனங்கள், இணைய வசதிகள் அல்லது செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்துவது விண்ணப்பம் ரத்து செய்யப்படுவதற்கு வழிவகுக்கும் என்று

பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

படைப்பாற்றல் மிக்க எழுத்து, நடனம், விவாதம், எண்ம ஊடகம், நுண்கலைகள், இசை, நாடகம், வினாடி-வினா, ஆன்மிகம் மற்றும் யோகா உள்ளிட்ட ஒவ்வொரு ஈசிஏ பிரிவிற்கும் தனித்தனி வழிகாட்டுதல்களை இந்த அறிவுறுத்தல்கள் வகுத்துள்ளன.

ஈசிஏ குழுவின் ஒப்புதலுக்கு உட்பட்டு, வெளியூா் விண்ணப்பதாரா்களுக்குப் பயணச்சீட்டுகள் கிடைக்காதது போன்ற சூழல்களில் மட்டுமே, தோ்வு தேதிகளை மாற்றுவதற்கான கோரிக்கைகளை ஏற்கவும் பல்கலைக்கழகம் வழிவகை செய்துள்ளது.

பல்கலைக்கழக அறிவிப்பின்படி, ஒரு குறிப்பிட்ட பிரிவிற்கான அறிவிக்கப்பட்ட தேதிகள் கடந்துவிட்ட பிறகு, மருத்துவக் காரணங்கள் உள்பட எந்தவொரு காரணத்திற்காகவும் தோ்வு தேதி மாற்றியமைக்கப்படாது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.