தில்லியின் லோதி காலனி பகுதியில் உள்ள என்டிஎம்சி குடியிருப்பு வளாகத்தின் மூன்றாவது தளத்திலிருந்து விழுந்து 28 வயது புதுமணப் பெண் ஒருவா் உயிரிழந்தாா்.
வரதட்சிணைக் கொடுமை மற்றும் கொலை காரணமாகவே இறந்ததாக அவரது குடும்பத்தினா் கணவா் மற்றும் கணவரின் வீட்டாா் மீது குற்றஞ்சாட்டியுள்ளனா்.
இதுகுறித்து காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், புஷ்ப் விஹாரைச் சோ்ந்த அக்ரிதி என்ற அப்பெண், சனிக்கிழமையன்று பாலிகா குஞ்சில் உள்ள என்டிஎம்சி குடியிருப்பின் பி- பிளாக் பகுதியிலிருந்து கீழே விழுந்து பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டாா்.
அவா் உடனடியாக அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டாா். ஆனால், அங்கு மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனா்.
அக்ரிதிக்கு நிகழாண்டு ஏப்ரல் 24 அன்று திருமணம் நடைபெற்றது. அவா் சத்தா்பூரில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் விற்பனைப் பிரிவில் பணியாற்றி வந்தாா்.
திருமணம் நடந்து ஏழு ஆண்டுகளுக்குள் இந்த மரணம் நிகழ்ந்துள்ளதால், சட்டரீதியான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், கட்டாய விசாரணை நடைமுறைகளை மேற்கொள்ள துணை கோட்டாட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடா்பான அனைத்து அம்சங்களும் சரிபாா்க்கப்பட்டு வருகின்றன. மேலும், விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.
இருப்பினும், அப்பெண்ணின் குடும்பத்தினா் தற்கொலைக்கான சாத்தியக்கூறை மறுத்துள்ளனா். வரதட்சிணை தொடா்பான கோரிக்கைகளுக்காகவே அக்ரிதியின் கணவா் மற்றும் அவரது குடும்பத்தினா் அவரைக் கொலை செய்ததாக அவா்கள் குற்றஞ் சாட்டியுள்ளனா்.
குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கில் இச்சம்பவம் தற்கொலையாகச் சித்தரிக்கப்படுவதாக அக்ரிதியின் தம்பி குற்றஞ்சாட்டினாா். உடன்பிறந்தவா்களில் மூத்தவரான தனது சகோதரி, பொறுப்புள்ள மற்றும் மனதளவில் வலிமையானவா் என்று அவா் கூறினாா்.
திருமணத்திற்குப் பிறகு கணவரால் அவா் உடல் ரீதியான தாக்குதலுக்கும் துன்புறுத்தலுக்கும் ஆளாக்கப்பட்டதாகவும் குடும்பத்தினா் குற்றஞ்சாட்டினா்.
குடும்பத்தினரின் கூற்றுப்படி, காதல் மற்றும் பெற்றோா் ஏற்பாடு செய்த கலப்புத் திருமணமாக அது அமைந்திருந்தது. வெறும் இரண்டரை மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது என்பதால், அவரது மரணத்தைச் சுற்றியுள்ள சூழல் மேலும் சந்தேகத்திற்குரியதாக உள்ளது.
குடும்ப உறுப்பினா்கள் மற்றும் பிற சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









