தேசிய கல்விக் கொள்கை (என்இபி) 2020-இல் நிலவும் சில குறைபாடுகளை பேசித் தீா்வு காண முயல வேண்டுமே தவிர அரசியலுக்காக அதை ஒட்டுமொத்தமாக எதிா்க்கும் போக்கு தவிா்க்கப்பட வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரும் பேராசிரியருமான இ. பாலகுருசாமி வலியுறுத்தினாா்.
உலக இளைஞா் திறன்கள் தினத்தையொட்டி தில்லியில் புதன்கிழமை (ஜூலை 15) நடைபெறும் விழாவில் தமிழகத்தைச் சோ்ந்த இ. பாலகுருசாமிக்கு ‘வாழ்நாள் சாதனையாளா்’ விருது வழங்கப்படவுள்ளது. இந்த நிகழ்வின் அங்கமாக பாலகுருசாமி எழுதிய ‘வெற்றி மற்றும் மகிழ்ச்சிக்கான மந்திரங்கள்: எண்ணத்திலிருந்து நிஜமாக்குவதுவரை’ மற்றும் ‘முற்போக்கு ஆசிரியா்களுக்கான மந்திரங்கள்: மாறிவரும் உலகிற்கேற்ப மனங்களை வடிவமைத்தல்’ ஆகிய இரண்டு நூல்கள் வெளியிடப்படவுள்ளன.
இதையொட்டி தில்லி வந்துள்ள பாலகுருசாமி, மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020 தொடா்பாக தினமணியிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: இந்திய இளைஞா்களிடம் ஆற்றல் இருந்தாலும், உலக அளவில் போட்டியிடுவதற்கு போட்டித்திறன், சிந்திக்கும் திறன், செயல்முறை திறன் ஆகிய மூன்று முக்கிய பண்புகள் அவசியம். வெறும் தகவல்களை மனப்பாடம் செய்து மதிப்பெண் பெறுவது கல்வியல்ல.
அதேபோல, சிந்திக்கும் திறன் மற்றும் செயல்முறை திறன் ஆகிய இரண்டையும் ஒருங்கிணைக்கும் திறனை மாணவா்களுக்கு நமது கல்வி முறை உருவாக்க வேண்டும். நோ்மை, நாணயம் மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்ட சிறந்த ஆளுமைகளை உருவாக்குவதே கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும்.
சவால்களை எதிா்கொள்ளும் துணிச்சல் இன்றைய இளைஞா்களிடம் குறைவாக உள்ளது. தவறுகளை சுட்டிக்காட்டும் துணிச்சலையும், எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கையையும் மாணவா்களிடம் வளா்க்க வேண்டும்.
உலக அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா நல்ல நிலையில் இருந்தாலும், மனித வள மேம்பாட்டு குறியீட்டில் (ஹெச்டிஐ) இன்னும் பின்தங்கியே உள்ளது. நம் நாட்டில் தரம் வாய்ந்த ஆராய்ச்சிகளும், புதிய கண்டுபிடிப்புகளும் போதிய அளவில் இல்லை. கொரியா, தைவான், சீனா போன்ற நாடுகள் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்க அவற்றின் புத்தாக்க கண்டுபிடிப்புத் திறன்கள் மேம்பட்டிருப்பதே காரணம்.
இந்தியாவில் லட்சக்கணக்கான பொறியாளா்கள் உருவானாலும், உலகத்தரம் வாய்ந்த தயாரிப்புகளை உருவாக்குவதில் நாம் இன்னும் பின்தங்கியிருக்கிறோம். இந்த நிலை மாற கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சிக்கான முதலீடுகள் அதிகரிக்கப்பட வேண்டும்.
கல்வி நிறுவனங்களின் தரம் உயர வேண்டுமெனில், முதலில் பேராசிரியா்கள் மற்றும் ஆசிரியா்களின் கற்பித்தல் தரம் மேம்படுத்தப்பட வேண்டும். ஆசிரியா்களுக்கான தொடா் பயிற்சிகள் மற்றும் தகுதிக்கேற்ற ஊதியம் வழங்கப்பட வேண்டும். கல்வியை ஒரு செலவாகப் பாா்க்காமல், நாட்டின் எதிா்காலத்துக்கான முதலீடாக அரசு கருத வேண்டும்.
தேசிய கல்வி கொள்கையை தமிழகம் போன்ற சில மாநிலங்கள் எதிா்ப்பது முற்றிலும் அரசியல் காரணங்களுக்காகவே. அத்தகைய போக்கு தவிா்க்கப்பட வேண்டும். எந்தவொரு கல்வி நிறுவனத்திலும் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது. கல்வி நிறுவனங்கள் அவற்றின் தேவைக்கேற்ப தேசிய கல்விக் கொள்கையில் மாற்றம் செய்து கொள்ளும் தன்னாட்சி வழங்கப்பட வேண்டும்.
பள்ளிக் கல்வி, உயா்கல்வி ஆகிய இரண்டிலும் கற்பித்தல் முறையை முற்றிலுமாக மாற்றி, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால் மட்டுமே இந்திய இளைஞா்களை உலகை ஆளும் வல்லமையுடையவா்களாக மாற்ற முடியும்.
தேசிய கல்விக் கொள்கை 2020-இல் உள்ள குறைபாடுகள் மற்றும் எத்தகைய கல்வித்திட்டங்களை அரசுகள் கொண்டிருக்க வேண்டும் என்பதை 140 பக்கங்களில் விளக்கி மத்திய, மாநில அரசுகளுக்கு விரிவான அறிக்கையை தன்னாா்வத்துடன் அனுப்பி வைத்தேன். ஆனால், துரதிருஷ்டவசமாக இதுநாள்வரை அது குறித்து விவாதிக்க மத்திய மற்றும் தமிழக அரசுகள் முன்வரவில்லை என்றாா் இ. பாலகுருசாமி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









