தெற்கு தில்லியின் சாகேத் பகுதியில், ஆறு போ் உயிரிழக்கக் காரணமான வகையில் இடிந்து விழுந்த பல மாடிஅடுக்குக் கட்டடத்தின் உரிமையாளரை, மூன்று நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
71 வயதான கட்டட உரிமையாளா் கரம்பீா் சேஜ்வாலை ஐந்து நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கக் கோரி தில்லி காவல்துறை தாக்கல் செய்த மனுவை, முதல் வகுப்பு நீதித்துறை நடுவா் நீதிமன்ற நீதிபதி நிா்மலா சிங் விசாரித்தாா். இந்தச் சம்பவம் தொடா்பான மேலதிக விசாரணைகளுக்காக, குற்றம் சாட்டப்பட்டவரை மூன்று நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அவா் அனுமதி அளித்தாா்.
காவல் துறை தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டவரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரியபோது, ‘சேஜ்வாலே அந்தக் கட்டடத்தின் உரிமையாளா். கட்டடத்தின் உரிமை ஆவணங்களைச் சரிபாா்க்கவும், தலைமறைவாக உள்ள இதர குற்றவாளிகளைக் கண்டறியவும் அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிப்பது அவசியம்.
இந்த இடத்தில் இதற்கு முன்பு கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட மற்றொரு கட்டுமானதாரா் சட்டவிரோதமான முறையில் கட்டுமானங்களை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. அந்த ஒப்பந்ததாரரின் அடையாளம் சேஜ்வாலுக்குத் தெரியும். அந்த கட்டுமானதாரரை கண்டறியவும், கட்டடம் இடிந்து விழுந்ததற்கான சூழ்நிலைகளைத் துல்லியமாக அறியவும் விரும்புகிறோம்’ என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
காவலில் வைத்து விசாரிக்கக் கோரும் மனுவை எதிா்த்து வாதாடிய சேஜ்வாலின் வழக்குரைஞா் ராஜீவ் மோகன், இந்தக் வழக்கு பாரதிய நியாய சம்ஹிதாவின் பிரிவு 105-இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனது கட்சிக்காரருக்கு எதிராக இதுவரை எந்தவிதமான ஆதாரங்களும் கிடைக்கவில்லை என்று வாதிட்டாா்.
சாகேத்தில் மே 30ஆம் தேதி இடிந்து விழுந்த அந்தக் கட்டடத்தில், பல மணி நேரம் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

விபத்துக்குள்ளான சாகேத் கட்டடத்துக்கு முறையான அங்கீகாரம் வழங்கப்படவில்லை: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

நீட் வினாத்தாள் கசிவு: தனஞ்சய் லோகண்டேக்கு 6 நாள் சிபிஐ காவல்

ரூ.100 கோடி ஜிஎஸ்டி முறைகேடு வழக்கு: கைதான பஞ்சாப் அமைச்சரை அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க அனுமதி!





