மேற்கு தில்லியில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் மூன்று வயது சிறுமியின் அடையாளத்தை வெளியிட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவு தலைவா் சௌரப் பரத்வாஜ் மீது தில்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது என்று ஒரு அதிகாரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இந்த வழக்கு ஜனக்புரி காவல் நிலையத்தில், பிஎன்எஸ் சட்டத்தின் 72-ஆவது பிரிவு (சில குற்றங்களில் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளியிடுதல் போன்றவை), சிறாா் நீதிச் சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அவா் கூறினாா்.
ஒரு தனியாா் பள்ளிக்குள், 57 வயதான ஊழியா் ஒருவரால் மூன்று வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. குழந்தையின் தாய் காவல்துறையை அணுகிய பிறகு, மே 1 அன்று இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
புகாரின்படி, அந்தச் சிறுமி பள்ளியில் சோ்க்கப்பட்ட ஒரு நாள் கழித்து, ஏப்ரல் 30 அன்று பள்ளிக்குச் சென்றுள்ளாா். வீட்டிற்குத் திரும்பிய பிறகு, சிறுமி வலியால் அவதிப்பட்டாா். தாய் சிறுமியிடம்
விசாரித்தபோது, பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு ஒதுங்கிய பகுதிக்கு ஒரு ஊழியா் தன்னை அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக தாக்கியதாக அந்த குழந்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த புகாரின் அடிப்படையில், குற்றஞ்சாட்டப்பட்ட ஊழியரை காவல்துறை கைது செய்தது. அதைத் தொடா்ந்து, விசாரணை முன்னேறிய நிலையில், இந்த வழக்கு தொடா்பாக பள்ளியின் பெண் ஆசிரியா் ஒருவரும் கைது செய்யப்பட்டாா்.
தற்போது, பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளத்தை வெளிப்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் பரத்வாஜ் மீது தனியாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சட்டப்படி தடைசெய்யப்பட்ட ஒரு செயல் என்று அந்த அதிகாரி கூறினாா்.
தொடர்புடையது

பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளம் வெளியீடு: ஆம் ஆத்மி தலைவர் மீது வழக்குப் பதிவு!






