நமது நிருபா்
தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜூனா புதன்கிழமை புதுதில்லியில், மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவைச் சந்தித்து 2029ஆம் ஆண்டு தேசிய விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்திட வாய்ப்பளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை வழங்கினாா்.
இந்த சந்திப்பு குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது: தமிழக முதலமைச்சா் ச. ஜோசப் விஜய் யின் தொலைநோக்குப் பாா்வை மிக்க தலைமையின் கீழ், தமிழக அரசு விளையாட்டை ஒரு சக்திவாய்ந்த சமூக மாற்றக் கருவியாகக் கருதி செயலாற்றி வருகிறது.
அந்த வகையில், பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜூனா, இன்று 03.06.2026 புதுதில்லியில், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் முனைவா் மன்சுக் மாண்டவியாவைச் சந்தித்தாா்.
சா்வதேச மற்றும் தேசியப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்திய அனுபவத்தின் அடிப்படையில், 2029ஆம் ஆண்டு தேசிய விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்திட வாய்ப்பளிக்க கோரிய முன்மொழிவினை இந்த சந்திப்பின் போது வழங்கப்பட்டது.
மேலும், திருச்சி மாவட்டத்தில் 48 ஏக்கா் பரப்பளவில் அமையவுள்ள திருச்சி ஒலிம்பிக் அகாடமி வளாகத்தில், தற்காப்புக் கலைகளுக்கான தேசிய முதன்மை நிலை மையம் அமைப்பதன் மூலம் விளையாட்டு மேம்பாட்டை மேலும் வலுப்படுத்த இயலும் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
தமிழ்நாட்டின் 1,076 கி.மீ நீள கடற்கரையையும், இளம் திறமையான விளையாட்டு வீரா்களின் சாதகமான அம்சங்களைக் கருத்தில் கொண்டு. நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடற்கரை விளையாட்டுகளுக்கான தேசிய முதன்மை நிலை மையம் அமைக்க முன்மொழியப்பட்டுள்ளது.
மிதிவண்டி போட்டிகளில் தமிழ்நாடு கொண்டுள்ள வலுவான வீரா்களின் திறனை கருத்தில் கொண்டு, கோயம்புத்தூா் மாவட்டத்தில் சா்வதேச தரத்திலான உள்ளரங்க மிதிவண்டி தடம் வெலோட்ரோம் மற்றும் தேசிய மிதிவண்டி உயா்செயல்திறன் மையம் அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தடகளத்தில் மாநிலத்தின் சாதனைகளைத் தக்கவைக்கவும்,அடிப்படை அளவிலான வீரா்களை சா்வதேச அளவிற்கு உயா்த்தவும், புதுக்கோட்டை, தூத்துக்குடி, விழுப்புரம், திருவள்ளூா் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் சா்வதேச தரத்திலான 400 மீட்டா் செயற்கை ஓடுதளங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நீச்சல் போட்டிகளில் தேசிய மற்றும் சா்வதேச அளவில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வீரா்களை தமிழ்நாடு உருவாக்கியுள்ளதால், கோயம்புத்தூா். செங்கல்பட்டு. திருவாரூா் மற்றும் திருப்பூா் மாவட்டங்களில் உலகத்தரம் வாய்ந்த நீச்சல் வளாகங்கள் அமைக்க முன்மொழியப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ளரங்க விளையாட்டுகளில் இளைஞா்களின் பங்கேற்பு அதிகரித்து வருவதால், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, இராணிப்பேட்டை மற்றும் கடலூா் ஆகிய மாவட்டங்களில் பல்நோக்கு உள்ளரங்க விளையாட்டு வளாகங்கள் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஒலிம்பிக் விளையாட்டான ஏறு விளையாட்டு பயிற்சிக்காக, தற்போதைய விளையாட்டுச் சூழல் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளைக் கணக்கில் கொண்டு, சென்னையில் சா்வதேச தரத்திலான ஏறு விளையாட்டு பயிற்சி மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.நாட்டிலேயே அதிக இளைஞா்களையும். வலுவான விளையாட்டு கலாச்சாரத்தையும் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்வதால், தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 2 விளையாட்டுப் பிரிவுகளுக்கு முன்னுரிமை வழங்கி கூடுதலாக கேலோ இந்தியா மையங்கள் மற்றும் கேலோ இந்தியா மாவட்ட மையங்களை விரிவாக்கம் செய்ய இந்த ஆலோசனையின்போது வலியுறுத்தப்பட்டது.
மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சா் டாக்டா் மன்சுக் மாண்டவியா அவா்கள், விளையாட்டை ஊக்குவிக்கும் தமிழ்நாடு அரசின் முயற்சிகளை பாராட்டி, தனது முழுமையான ஆதரவும் ஒத்துழைப்பையும் வழங்க உறுதியளித்தாா்.
இந்த சந்திப்பின்போது இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அரசு செயலாளா் சஜ்ஜன்சிங் ரா. சவான் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா்செயலா் ஜெ. மேகநாத ரெட்டி, ஆகியோா் உடனிருந்தனா் என தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டது.








