சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!ரூ. 397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவுஇஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் மோதல்!
/

தில்லி சட்டப்பேரவையின் பாதுகாப்பை மேம்படுத்த கண்காணிப்பு கோபுரம், ரோந்துப் பாதை அமைக்க திட்டம்!

தில்லி சட்டப்பேரவையின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கையாக, வளாகத்தின் சுற்றுச் சுவரை ஒட்டி கண்காணிப்பு கோபுரம், பிரத்யேக ரோந்துப் பாதையை அமைப்பதற்கான திட்டங்களை அரசு தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image

தில்லி சட்டப்பேரவை

Updated On :9 ஜூன் 2026, 5:02 am IST

தில்லி சட்டப்பேரவையின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கையாக, வளாகத்தின் சுற்றுச் சுவரை ஒட்டி கண்காணிப்பு கோபுரம் மற்றும் பிரத்யேக ரோந்துப் பாதையை அமைப்பதற்கான திட்டங்களை அரசு தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

தில்லி சட்டப் பேரவை வளாகத்தில் ஏப்ரல் மாதத்தில் பாதுகாப்பு மீறல் சம்பவம் ஒன்று நிகழ்ந்ததைத் தொடா்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஏப்ரலில் முகமூடி அணிந்த நபா் ஒருவா் சட்டப்பேரவையின் சுற்றுச் சுவா் வாயில்களில் ஒன்றின் வழியாக வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்தாா். இது ஏற்கனவே உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த தீவிர கவலைகளை எழுப்பியது.

அந்த ஊடுருவல் சம்பவத்தைத் தவிர, நிகழ் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற வருடாந்திர பட்ஜெட் கூட்டத்தொடரின் போது தில்லி சட்டப்பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தாவுக்கு வெடிகுண்டு மிரட்டல்களும் விடுக்கப்பட்டன. இது அதிகாரிகளின் பாதுகாப்பு கவலைகளை மேலும் அதிகரித்தது.

ஊடுருவிய நபா் தப்பிச் செல்வதற்கு முன் பேரவைத் தலைவரின் அதிகாரபூா்வ வாகனத்திற்குள் பூங்கொத்து ஒன்றை வைத்திருந்தாா். அந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து, குப்தா தில்லி காவல்துறை, பொதுப் பணித் துறை மற்றும் உளவுத் துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்து அமைப்புகளுடனும் உயா்நிலை பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினாா் அதில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டன.

இந்த நிலையில், இதுகுறித்து பொதுப் பணித் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: ஒட்டுமொத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்தும் நடவடிக்கையாக தில்லி சட்டப்பேரவையில் கண்காணிப்பு கோபுரம் மற்றும் ரோந்துப் பாதை அமைக்கப்படவுள்ளது. இத்திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

பணி ஒப்படைக்கப்பட்டதிலிருந்து கட்டுமானத்தை முடிக்க இரண்டு மாதங்கள் ஆகும். இத்திட்டத்திற்கு ரூ. 94 லட்சம் செலவாகும். பாதுகாப்பு நிா்வாகத்தில், கண்காணிப்பு கோபுரம் என்பது பெரும்பாலும் காவலா் ஒருவா் தரைப்பகுதியில் நடக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் உற்றுநோக்குவதற்கு ஏற்ற உயரமான இடமாகப் பயன்படுத்தப்படுகிறது.

வளாகத்திற்குள் விரைவாகச் செயல்படுவதை உறுதிசெய்ய, அதிகாரிகள் ஒரு பிரத்யேக நடமாடும் ரோந்து வாகனத்தை பணியமா்த்தத் திட்டமிட்டுள்ளனா். இது விரைவாக நகரும் மற்றும் உடனடியாகத் தலையிடும் திறன் கொண்டதாக இருக்கும். அத்துடன் அங்கீகரிக்கப்படாத நடமாட்டத்தைத் தடுத்து நிறுத்தும் திறனையும் கொண்டிருக்கும்.

ஒரே இடத்தில் நிலையாகப் பணியமா்த்துவது மட்டும் போதாது என்பதால், பாதுகாப்பு மீறலுக்குப் பிந்தைய கூட்டத்தில், அனைத்து அமைப்புகளுக்கும் இடையே நிகழ்நேரத் தகவல்களைப் பரிமாறிக் கொள்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பேரவைத் தலைவா் உத்தரவிட்டிருந்தாா்.

பிற பாதுகாப்பு மேம்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நுழைவுப் புள்ளிகளில் உள்ள பௌதீகக் கட்டமைப்புகளை வலுப்படுத்தவும், வலுக்கட்டாயமாக உள்ளே நுழைய முயலும் முயற்சிகளைத் தடுக்கக் கூடிய வகையில் நுழைவாயில் அமைப்புகளை உறுதியானதாக மாற்றவும் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.