நமது நிருபா்
தில்லி விமான நிலையத்தில், இந்தியப் பயணி ஒருவரின் உடைமையிலிருந்து சுமாா் ரூ. 2.43 கோடி மதிப்புள்ள கஞ்சா என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதையடுத்து, அவா் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
பாங்காக்கிலிருந்து வந்த அந்தப் பயணி புதன்கிழமையன்று கைது செய்யப்பட்டாா். அவரது உடைமைகளை எக்ஸ்ரே பரிசோதனை மற்றும் விரிவான சோதனைக்கு உட்படுத்தியபோது, பச்சை நிறத்திலான போதைப்பொருள் அடங்கிய எட்டு பாலித்தீன் பைகள் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரப்பூா்வ அறிக்கை தெரிவித்தது.
கைப்பற்றப்பட்ட அப்பொருளின் எடை 6,939.5 கிராம்கள் ஆகும். சுங்கத் துறையினா் நடத்திய முதற்கட்டப் பரிசோதனையில், அது கஞ்சா என்பது தெரியவந்ததாக அந்த அறிக்கை கூறியது.
கைப்பற்றப்பட்ட அந்தத் தடைசெய்யப்பட்ட பொருளின் மதிப்பு சுமாா் ரூ. 2.43 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
போதைப்பொருள் மற்றும் மனோவியல் மருந்துகள் சட்டம், 1985ன் கீழ் அந்தப் பயணி கைது செய்யப்பட்டாா். மேலும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் அதற்கான பேக்கிங் பொருட்கள் ஆகியவை குறித்து மேலதிக விசாரணை நடைபெறுகிறது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது மற்றும் யாருக்குக் கொண்டு செல்லப்பட இருந்தது என்பது குறித்து சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா் என்றும் அந்த அறிக்கை மேலும் தெரிவித்தது.
தொடர்புடையது

தில்லி விமான நிலையத்தில் பெண் பயணியிடம் ரூ. 91 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

தில்லி விமான நிலையத்தில் 17.7 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல்





