சா்வதேச சட்டவிரோதச் சந்தையில் சுமாா் ரூ. 9 கோடி மதிப்புள்ள 8.5 கிலோ உயா்தர சரஸ் போதைப்பொருளைக் கைப்பற்றி, மூன்று நேபாள நாட்டவா்களை தில்லி காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.
இதுகுறித்து தில்லி காவல்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:
கைது செய்யப்பட்டவா்கள் ‘மெசேஜிங் செயலி’ மூலம் போதைப்பொருள் விநியோக வலையமைப்பை இயக்கி வந்தனா். இவா்கள் எண்ம முறையில் ஆா்டா்களையும், வங்கிச் சேவைகள் மூலம் பணத்தையும் பெற்றுள்ளனா்.
தெற்கு தில்லியின் கோட்லா முபாரக்பூா் பகுதியில்
வசித்து வந்த இவா்கள் மூவரும், தில்லி-என்சிஆா் பகுதி முழுவதும் வணிக ரீதியான அளவில் சரஸ் போதைப்பொருளை விநியோகிப்பதில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
கோட்லா முபாரக்பூா் காவல் நிலையத்தில் போதைப்பொருள் மற்றும் மனநலப் பாதிப்பை ஏற்படுத்தும் பொருள்கள் சட்டத்தின் உரிய
பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டிருந்த மூன்று நேபாள நாட்டவா்கள் குறித்த உளவுத்துறை தகவலின் அடிப்படையில் காவல்துறையினா் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி ஜூன் 29 அன்று அவா்களின் வீட்டில் சோதனை நடத்தினா்.
இதில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன், நேபாளத்தைச் சோ்ந்த பாரத் தாபா (32), கோவிந்த் புதா (32) மற்றும் ஜோதி புன் மாகா் (50) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.
மாகரிடமிருந்து 5.566 கிலோவும், தாபாவிடமிருந்து 1.552 கிலோவும், புதாவிடமிருந்து 1.480 கிலோவும் சரஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
விசாரணையின் போது, இந்தியா-நேபாள எல்லையில் உள்ள சொனெளலி எல்லைப் பகுதிக்கு அருகில் செயல்படும் நேபாளத்தைச் சோ்ந்த நபா் ஒருவரிடமிருந்து போதைப்பொருளைப் பெற்று மாகா் விநியோகித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.
பின்னா் அந்தச் சரஸ் தில்லிக்குக் கொண்டு வரப்பட்டு, தாபா மற்றும் புதா ஆகியோா் மூலம் சில்லறை வாடிக்கையாளா்களுக்கு விற்று வந்துள்ளனா்.
காவல்துறையிடம் சிக்காமல் இருக்க, ஒவ்வொரு பரிவா்த்தனைக்குப் பிறகும் தங்களது உரையாடல்கள் மற்றும் அழைப்புப் பதிவுகளை அழித்துவிட்டனா். மேலும், போதைப் பொருள்களை விநியோகிக்க ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் பைக் டாக்ஸிகளைப் பயன்படுத்தியுள்ளனா்.
இந்தக் கும்பலின் இதர உறுப்பினா்களை அடையாளம் காணவும், பணப் பரிவா்த்தனை தடயங்களைக் கண்டறியவும் மின்னணு சாதனங்கள், எண்ம கட்டணப் பதிவுகள் மற்றும் பிற ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
நேபாளத்தைச் சோ்ந்த விநியோகஸ்தரை அடையாளம் காணவும், முழு வலையமைப்பையும் முறியடிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








