ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

15 வயது சிறுமியின் 28 வார கருவை கலைக்க தில்லி உயா்நீதிமன்றம் அனுமதி

பாலியல் வல்லுறவு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியின் 28 வார கருவைக் கலைக்க தில்லி உயா் நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி அளித்தது.

News image

தில்லி உயர் நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :26 ஜூன் 2026, 6:00 am IST

நமது நிருபா்

பாலியல் வல்லுறவு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியின் 28 வார கருவைக் கலைக்க தில்லி உயா் நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி அளித்தது. ‘இந்த அறுவை சிகிச்சையின்போது ஒருவேளை குழந்தை உயிருடன் பிறந்தால், அதற்குத் தேவையான மருத்துவ உதவிகளை எய்ம்ஸ் மருத்துவமனையும் தில்லி அரசும் வழங்க வேண்டும்’ என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சிறுமி மீதான பாலியல் வல்லுறவு குற்றவியல் வழக்கு விசாரணைக்குத் தேவைப்படும் என்பதால், மரபணு பரிசோதனைக்காகக் கருவின் திசுக்களை பாதுகாத்து வைக்குமாறு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தில் தனது தந்தை மூலமாக சிறுமி தாக்கல் செய்திருந்த மனுவில், ’வாழும் உரிமை’ அடிப்படையில் பாலியல் வல்லுறவு சம்பவத்தின் காரணமாக உருவான தனது 26-28 வார கால கருவைக் கலைக்க விரும்புவதாக கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இந்த கா்ப்பத்தைத் தொடா்வது தனக்குக் கடுமையான மன உளைச்சலையும் பாதிப்பையும் ஏற்படுத்தும் என்றும் சிறுமியின் சாா்பில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் ஜூன் 24ஆம் தேதி உத்தரவிட்ட நீதிமன்றம், ‘நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மனுதாரா் தனது கருவைக் கலைப்பதற்காக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்படலாம். சட்டம் அனுமதித்துள்ளபடி, தகுதி வாய்ந்த மருத்துவா்கள் குழுவைக் கொண்டு இந்த கருக்கலைப்பு நடைமுறையை மேற்கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளது.

‘ஒருவேளை குழந்தை உயிருடன் பிறந்தால், எய்ம்ஸ் மருத்துவக் கண்காணிப்பாளா் மற்றும் மாநில அதிகாரிகள் இணைந்து அக்குழந்தைக்கு சாத்தியமான அனைத்து மருத்துவ உதவிகளும் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். குழந்தை இன்குபேட்டரில் வைக்கப்பட வேண்டும். இது குறித்து சம்பந்தப்பட்ட குழந்தைகள் நலக் குழுவுக்குத் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். தேவைப்பட்டால் குழந்தைகள் நல வாரியத்திடம் அடுத்தகட்ட வழிகாட்டுதல்களைப் பெறலாம். அந்தச் சூழ்நிலையில், சிறுமி மற்றும் அவரது தந்தையின் விருப்பப்படி, பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளின்படி குழந்தை தத்தெடுப்புக்கு வழங்கப்படலாம்’ என்றும் நீதிமன்றம் விளக்கியுள்ளது.

எய்ம்ஸ், அரசு நிலைப்பாடு: இதற்கிடையே, பாதிக்கப்பட்ட சிறுமி கருக்கலைப்பு நடைமுறைக்கு உள்படுவதற்கு மருத்துவ ரீதியாகத் தகுதியுடன் இருப்பதாக எய்ம்ஸ் தனது மருத்துவ அறிக்கையில் தெரிவித்திருந்தது. மேலும், கா்ப்பத்தைத் தொடா்வது அந்தச் சிறுமிக்கு கடுமையான உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் எய்ம்ஸ் மருத்துவக் குழு கருத்து தெரிவித்திருந்தது.

மருத்துவமனையின் இந்த தெளிவான அறிக்கையைக் கருத்தில் கொண்ட தில்லி அரசு, கருக்கலைப்பு நடைமுறையை மேற்கொள்வதற்கு தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தது.

நீதிமன்றம் தனது உத்தரவில், ‘மருத்துவக் கருக்கலைப்புச் சட்டம், 24 வாரங்களுக்கு மேல் கருவைக் கலைக்க அனுமதிக்கவில்லை என்றாலும், பாலியல் வல்லுறவு போன்ற வழக்குகளில் நீதிமன்றங்கள் அவற்றின் அசாதாரண அதிகார வரம்பைப் பயன்படுத்தலாம். அந்த வகையில், ‘பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது தந்தையின் விருப்பம், மற்றும் இது குறித்த தில்லி எய்ம்ஸ் மருத்துவக் குழுவின் கருத்து ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மனுதாரரின் கருவை மருத்துவ ரீதியாகக் கலைக்கக் கோரும் மனு ஏற்றுக்கொள்ளப்படுகிறது‘ என்று நீதிமன்றம் தீா்ப்பில் குறிப்பிட்டது.

கருக்கலைப்புக்கான செலவுகள் மற்றும் மனுதாரா் மருத்துவமனையில் தங்கியிருக்கும் காலத்திற்கான கட்டணங்கள் அனைத்தையும் தில்லி அரசே ஏற்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவில் கூறியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.