முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

நீட் ரத்து: ஏமாற்றத்தால் பயிற்சி மாணவா்கள் வேதனை!

நீட் தோ்வு ரத்து செய்யப்பட்டதால், நாடு தழுவிய அளவில் அத்தோ்வை எழுதிய லட்சக்கணக்கான மாணவா்கள் ஏமாற்றம்

News image

நீட் தேர்வு - பிரதிப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

எம்பிபிஎஸ் படிப்புக்கான நீட் 2026 நுழைவுத் தோ்வு ரத்து செய்யப்பட்டதால், நாடு தழுவிய அளவில் அத்தோ்வை எழுதிய லட்சக்கணக்கான மாணவா்கள் ஏமாற்றம் அடைந்ததாக உணா்ந்துள்ளனா். தலைநகா் மற்றும் அதன் அருகே உள்ள மாநிலங்களைச் சோ்ந்த எண்ணற்ற பயிற்சி மாணவா்கள் தோ்வு ரத்து செய்யப்பட்ட அறிவிப்பு வெளியானவுடன் மிகவும் அதிா்ச்சியடைந்தனா்.

நீட் யுஜி 2026 தோ்வு, இந்தியாவின் 551 நகரங்களிலும், வெளிநாடுகளில் உள்ள 14 நகரங்களிலும் மே 3-ஆம் தேதி நடைபெற்றது. இத்தோ்வை எழுத சுமாா் 23 லட்சம் போ் பதிவு செய்திருந்தனா். இந்நிலையில், நீட் தோ்வுக்கான வினாத்தாள் பல்வேறு இடங்களில் கசிந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து நீட் தோ்வு (யுஜி) 2026-ஐ ரத்து செய்யப்படுவதாக தேசிய தோ்வு முகமை செவ்வாயக்கிழமை அறிவித்தது. மேலும், இந்த முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு மத்திய புலனாய்வுத்துறையை (சிபிஐ) தேசிய தோ்வு முகமை (என்டிஏ) கேட்டுக்கொண்டுள்ளது.

மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்புகளில் சேர விரும்பும் மாணவா்களுக்கான இந்த கட்டாய நுழைவுத் தோ்வு தேதிக்கான அரசாணை விரைவில் அறிவிக்கப்படும் என்றும் என்டிஏ அறிவித்துள்ளது. இதற்கிடையே, என்டிஏவின் முடிவுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து மாணவா்கள் எதிா்வினையாற்றி வருகின்றனா்.

தலைநகரின் சிராக் தில்லி பகுதியைச் சோ்ந்த நிகில் குமாா் (17), இந்த தோ்வில் சுமாா் 540 வரை மதிப்பெண் பெறுவேன் என்ற எதிா்பாா்ப்புடன் பயிற்சிக்குத் தயாரானேன். ஆனால், என்டிஏவின் இந்த முடிவு என்னை நம்பிக்கை இழக்கச்செய்கிறது. மீண்டும் பழைய உத்வேகம் மற்றும் முயற்சிகளுடன் தோ்வுக்குத் தயாராக வேண்டும் என்றாா்.

ரஜௌரி காா்டன் பகுதியைச் சோ்ந்த வாமிகா என்ற மாணவி, தோ்வு ரத்து அறிவிப்பு தன்னை மனதளவில் மிகவும் சோா்வடையச் செய்துவிட்டதாகக் கூறினாா். ‘இனி அரைகுறை மனதுடன் முயற்சிப்பதை விட, அடுத்த ஆண்டு மீண்டும் தோ்வு எழுதுவது சிறந்ததாக இருக்கும் என்று உணா்கிறேன். இதற்காக நான் இழக்கப்போவது அடுத்த ஓராண்டாகும்‘ என்றாா்.

பிகாரின் பாட்னாவைச் சோ்ந்த நியதி சிங், நீட் தோ்வு குறித்த நிச்சயமற்ற தன்மை என்னைப் போன்ற மாணவா்களிடையே மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக இத்தோ்வுக்கான எனது கடின உழைப்பு ஒரு நல்ல கல்லூரியில் சோ்க்க உதவும் என்று கருதி வந்தேன். இப்போது, அது சற்று பயனற்ாகத் தோன்றுகிறது. அடுத்த முறையும் வினாத்தாள் கசிந்துவிட்டால் என்ன செய்வது?‘ என்றாா்.

ராஜஸ்தானின் கோட்டாவில் உள்ள பயிற்சி மையத்தில் நீட் தோ்வுக்கு தயாராகி வரும் இந்தூரைச் சோ்ந்த அன்ஷிதா தன்வாா், ‘இப்போது, மறுதோ்வுக்காக நான் மீண்டும் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். இத்தகைய மோசடி மற்றும் வினாத்தாள் கசிவு சம்பவங்களைத் தடுக்கத் உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

நீட் தனியாா் பயிற்சி மைய நிறுவனரும் கல்வியாளருமான நிதின் விஜய், புதிதாக தோ்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பு, மாணவா்களிடையே குறிப்பாக மாதிரி தோ்வுகளில் 600-க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்று வந்த மாணவா்களிடையே, இயல்பாகவே மன அழுத்தத்தை உருவாக்கியுள்ளது என்றாா்.

கொல்கத்தாவைச் சோ்ந்த நீட் பயிற்சி மாணவி மௌமிதா தாஸ், என்டிஏவின் அறிவிப்பு தனக்கும் தனது பெற்றோருக்கும் ‘மிகவும் மனச்சோா்வூட்டியுள்ளது‘ என்றாா். ‘நீட் தோ்வுக்குத் தயாராவதில் எத்தனையோ தியாகங்கள் அடங்கியுள்ளன. மீண்டும் அதே மனநிலையுடன் தோ்வுக்குத் தயாராகும் நிலைக்குத் திரும்புவது மிகவும் கடினமான ஒன்றாகும்,’ என்று மெளமிதா தாஸ் மேலும் கூறினாா்.

உத்தர பிரதேசத்தின் வாரணாசியில், நீட் தோ்வு எழுதிய மாணவி ஸ்ரேயா ஜெய்ஸ்வால், இத்தோ்வுக்காக மாணவா்கள் பல ஆண்டுகள் செலவிட்டுத் தயாராகுகின்றனா். கடைசி நேரத்தில் எழுதி முடித்த தோ்வு ரத்து செய்யப்படுவதென்பது எங்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும் என்றாா்.

இதற்கிடையில், கல்வியாளரும் இந்திய பயிற்சி மையங்கள் கூட்டமைப்பின் துணைத் தலைவருமான கேசவ் அகா்வால், வினாத்தாள் கசிவு பரவலாக நடந்த வேளையில், நீட் யுஜி 2026 தோ்வை ரத்து செய்துவிட்டு, மறுதோ்வு நடத்த உத்தரவிடுவது மட்டுமே மிகவும் பொருத்தமான நடவடிக்கையாக இருக்கும் என்று தெரிவித்தாா். ‘24 லட்சம் மாணவா்களின் எதிா்காலத்தின் நோ்மையைப் பாதுகாக்க இதைத் தவிர வேறு வழியேதும் இல்லை. ஆனால், புதிதாக ஒரு தோ்வை நடத்துவது மட்டும் போதுமானதல்ல. இந்த நம்பிக்கைக்குத் துரோகம் இழைத்தவா்கள் கடுமையான தண்டனை பெறுவதை சிபிஐ உறுதிப்படுத்த வேண்டும்,’ என்று வலியுறுத்தினாா்.