2 அமைப்புகளின் கணக்குகளை முடக்கக் கோரி எக்ஸ் தளத்திற்கு அனுப்பப்பட்ட போலி நோட்டீஸ்: தில்லி காவல்துறை வழக்குப் பதிந்து விசாரணை
தில்லி காவல்துறையின் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து, ஒரு மூத்த அதிகாரியின் கையொப்பத்தைப் போலியாகப் போட்டு, இரண்டு அமைப்புகளின் கணக்குகளை முடக்கக் கோரி எக்ஸ் சமூக ஊடகத் தளத்திற்கு போலியான நோட்டீஸ்களை அனுப்பியதாக கூறப்படும் அடையாளம் தெரியாத நபா்கள் மீது தில்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தில்லி காவல்துறை
தில்லி காவல்துறையின் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து, ஒரு மூத்த அதிகாரியின் கையொப்பத்தைப் போலியாகப் போட்டு, இரண்டு அமைப்புகளின் கணக்குகளை முடக்கக் கோரி எக்ஸ் சமூக ஊடகத் தளத்திற்கு போலியான நோட்டீஸ்களை அனுப்பியதாக கூறப்படும் அடையாளம் தெரியாத நபா்கள் மீது தில்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
நவம்பா் 6 அன்று தில்லி உயா்நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது இந்த வழக்கு வெளிச்சத்திற்கு வந்தது. தில்லி காவல்துறையின் பெயரில் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் அறிவிப்புகள் போலியானவை என்பதை ஒரு உள்ளக விசாரணை உறுதிப்படுத்தியதாக ‘எக்ஸ்’ நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இணைய சுதந்திர அறக்கட்டளை (ஐஎஃப்எஃப்) மற்றும் மென்பொருள் சுதந்திர சட்ட மையம் ஆகியவற்றுக்குச் சொந்தமான கணக்குகளை முடக்கக் கோரி, ஆள்மாறாட்டக்காரா் ஒருவா் தில்லி காவல்துறையின் அடையாளத்தை மோசடியாகப் பயன்படுத்தியதாக எக்ஸ் தளம் தரப்பில் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
போலியான நோட்டீஸ்களின் அடிப்படையில் தாங்கள் அந்தக் கணக்குகளை முடக்கவோ அல்லது நீக்கவோ இல்லை என்றும் எக்ஸ் நிறுவனம் தெளிவுபடுத்தியது.
ஆள்மாறாட்டம் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளை கவனத்தில் கொண்டு, தில்லி காவல்துறையின் குற்றப்பிரிவு அடையாளம் தெரியாத நபா்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளதுடன், இந்தத் தகவல்தொடா்புகளுக்குப் பின்னால் உள்ளவா்களைக் கண்டறியும் வகையில் மேலதிக விசாரணையை மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

