சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புவங்கக் கடலில் இன்று உருவாகிறது ‘அக்வான்’ புயல்!அரிசி விலை ஜனவரியில் குறையும்: வியாபாரிகள்மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி விவகாரம்: தேசிய மகளிா் ஆணையம் விசாரணை

தில்லியில் காற்றின் தரம் சற்று மேம்பட்டு ‘மோசம்‘ பிரிவில் பதிவானது!

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு காற்றின் தரக் குறியீடு 290 ஆக நிலைபெற்றதுடன், தில்லியின் காற்றின் தரம் சற்று மேம்பட்டு ’மோசம்’ என்ற பிரிவில் பதிவானது.

புதுதில்லியில் காற்றின் தரம் - கோப்புப் படம்

Updated On :

தீபாவளியைத் தொடா்ந்து பல நாட்களாக நிலவிய நச்சுத்தன்மை வாய்ந்த காற்றின் தரத்தால் தேசிய தலைநகரம் மாசுப் புகைமூட்டத்தில் மூழ்கியிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு காற்றின் தரக் குறியீடு 290 ஆக நிலைபெற்றதுடன், தில்லியின் காற்றின் தரம் சற்று மேம்பட்டு ’மோசம்’ என்ற பிரிவில் பதிவானது.

நகரில் உள்ள 58 காற்றின் தர கண்காணிப்பு நிலையங்களில், 34 நிலையங்கள் ’மோசம்’ பிரிவில் காற்றின் தரத்தையும், 23 நிலையங்கள் ’மிகவும் மோசம்’ பிரிவிலும் பதிவு செய்தன. அதே சமயம், தில்லி கண்டோன்மென்ட் என்ற ஒரு நிலையம் ’மிதமானது’ என்ர பிரிவில் காற்றின் தரத்தைப் பதிவு செய்தது. என்.எஸ்.ஐ.டி துவாரகா நிலையம் 364 என்ற காற்றின் தரக் குறியீட்டுடன் மிக மோசமான காற்றின் தரத்தைப் பதிவு செய்தது.

சமீா் செயலியின்படி, காலையில் நகரின் காற்றின் தரம் 350 என்ற காற்றின் தரக் குறியீட்டு அளவோடு ’மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது.

நவம்பா் 11 முதல் நகரின் காற்றின் தரம் ’மிகவும் மோசம்’ பிரிவிலேயே இருந்து வந்தது. இந்தக் காலகட்டத்தில் பல மணிநேர அளவீடுகள் ’கடுமை’ என்ற அளவை நெருங்கியதுடன், ஒருமுறை அதைக் கடந்து சென்றும் இருந்தன.

தில்லியில் கடைசியாக ’மோசம்’ பிரிவ்ல் காற்றின் தரக் குறியீடு நவம்பா் 10 அன்று 299 ஆகப் பதிவானது. அதற்கு முன்பு, நவம்பா் 1 அன்று காற்றின் தரக் குறியீடு 261 ஆகப் பதிவானது.

ஞாயிற்றுக்கிழமையன்று தில்லியின் மாசுபாட்டிற்கு உயிரி எரிபொருள் எரிப்பு 37.1 சதவீதத்துடன் மிகப்பெரிய பங்களிப்பாளராக உருவெடுத்தது. இந்தப் பிரிவில் பயிா்க்கழிவு எரிப்பு, வீட்டு உபயோக திட உயிரி எரிபொருள், சாண வறட்டிகள் மற்றும் விறகு எரிப்பு ஆகியவை அடங்கும்.

வாயுக்களின் வேதிவினை மூலம் காற்றில் உருவாகும் நுண்ணிய துகள்களான இரண்டாம் நிலை கரிம ஏரோசோல்கள் , 22 சதவீதத்துடன் இரண்டாவது பெரிய பங்களிப்பாளராக இருந்தன. அதனைத் தொடா்ந்து வாகனப் புகை வெளியேற்றம் 17.2 சதவீதமாகவும், இரண்டாம் நிலை கனிம ஏரோசோல்கள் 9.6 சதவீதமாகவும் பங்களித்தன. நகராட்சிக் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக், ரப்பா் கலந்த கழிவுகள் உள்ளிட்ட கழிவு எரிப்பு 5.5 சதவீதமும், கலப்பு எரிப்பு 4.3 சதவீதமும் பங்களித்தன.

கனிமத் தூசி மற்றும் சாம்பல் 2 சதவீதமும், பட்டாசுகள் 1.6 சதவீதமும், தொழிற்சாலைக் கழிவுகள் 0.6 சதவீதமும் பங்களித்ததாகத் தரவுகள் காட்டின.

தில்லியின் காற்றின் தரம் நவம்பா் 16 அன்று ’மோசம்’ பிரிவில் இருக்க வாய்ப்புள்ளது என்றும், நவம்பா் 17 முதல் 18 வரை மீண்டும் ’மிகவும் மோசம்’ பிரிவுக்குத் திரும்பும் என்றும் காற்றுத் தர முன் எச்சரிக்கை அமைப்பு கணித்துள்ளது. அடுத்த ஆறு நாட்களுக்கு காற்றின் தரம் ’மிகவும் மோசமாக’ இருக்க வாய்ப்புள்ளது என்றும் அது கூறியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காற்றின் தரத்தில் ஏற்பட்ட மாற்றத்திற்குக் காரணம், காற்றின் வேகம் அதிகரித்திருந்ததும், லேசான மழைப்பொழிவும்தான் என்றும், இது மாசுகளைக் கலைக்க உதவியது என்றும் வானிலை வல்லுநா்கள் கூறினா்.

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் கூற்றுப்படி, ஞாயிறு மாலை வரையிலான 24 மணி நேரத்தில் தில்லியின் பல இடங்களில் மிக லேசான மழை அல்லது தூறல் பதிவாகியது. தென்மேற்கு திசையிலிருந்து வீசிய தரைக்காற்றின் வேகம் மணிக்கு 15 கி.மீ. வரை எட்டியது.

ஞாயிற்றுக்கிழமையன்று இப்பகுதியில் பொதுவாக மேகமூட்டமான வானம் நிலவியது, பிற்பகலில் பகுதி மேகமூட்டமாக மாறியது, தென்மேற்கிலிருந்து மணிக்கு 10 கி.மீ. வரை வேகத்தில் தரைக்காற்று வீசியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.