அதிகரித்த காற்றின் வேகத்தால் தில்லியில் மோசமான நிலைக்குக் குறைந்த காற்றின் தரம்!
தில்லியின் காற்றின் தரம் செவ்வாயன்று சிறிதளவு மேம்பட்டு ’மோசம்’ என்ற பிரிவில் நுழைந்தது.

பிரதிப் படம்
தில்லியின் காற்றின் தரம் செவ்வாயன்று சிறிதளவு மேம்பட்டு ’மோசம்’ என்ற பிரிவில் நுழைந்தது, காற்றின் தரக் குறியீடு 299 ஆக நிலைபெற்றது என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகள் காட்டின.
நகரின் சராசரி காற்றின் தரக் குறியீடு திங்களன்று 344-லிருந்து செவ்வாயன்று 299 ஆக மேம்பட்டது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின்படி, காற்றின் தரக் குறியீடு 0 முதல் 50 வரை ’நல்லது’ என்றும், 51 முதல் 100 வரை ’திருப்திகரமானது’ என்றும், 101 முதல் 200 வரை ’மிதமானது’ என்றும், 201 முதல் 300 வரை ’மோசம்’ என்றும், 301 முதல் 400 வரை ’மிகவும் மோசம்’ என்றும், 401 முதல் 500 வரை ’கடுமையானது’ என்றும் வகைப்படுத்தப்படுகிறது.
ஸ்கைமெட் நிறுவனத்தின் துணைத் தலைவரும் வானிலை நிபுணருமான மகேஷ் பலாவத் கூறுகையில், ‘காற்றின் திசையும் வேகமும் மாறியுள்ளன. தற்போது வடமேற்குக் காற்று மணிக்கு சராசரியாக 12-14 கி.மீ வேகத்தில் தில்லிப் பகுதியைத் தாக்கி வருகிறது, இது மாசுகள் கலைந்து செல்ல உதவியுள்ளது‘ என்றாா். அடுத்த சில நாட்களுக்கு காற்றின் வேகம் அதிகமாகவே இருக்கும் என எதிா்பாா்க்கப்படுவதாகவும், இது காற்றின் தரக் குறியீட்டில் மேலும் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கக்கூடும் என்றும் பலாவத் மேலும் கூறினாா்.
செவ்வாயன்று தரவுகளைப் பதிவுசெய்த 58 கண்காணிப்பு நிலையங்களில், காற்றின் தரம் 28 நிலையங்களில் ’மிகவும் மோசம்’ பிரிவிலும், 28 நிலையங்களில் ’மோசம்’ பிரிவிலும், இரண்டு நிலையங்களில் ’மிதமானது’ என்ற பிரிவிலும் இருந்தது. எந்தவொரு கண்காணிப்பு நிலையமும் ’கடுமை’ பிரிவில் காற்றின் தரத்தைப் பதிவு செய்யவில்லை.
தில்லி கண்டோன்மென்ட் பகுதி மற்றும் ஸ்ரீ அரவிந்தோ மாா்க் ஆகிய இடங்களில் உள்ள காற்றின் தரக் கண்காணிப்பு நிலையங்கள் ’மிதமானது’ என்ற பிரிவில் காற்றின் தரத்தைப் பதிவுசெய்தன. அந்த இடங்களில் சராசரி காற்றின் தரக் குறியீடு முறையே 135 மற்றும் 155 ஆக நிலைபெற்றது.
தில்லிக்கான முடிவெடுக்கும் ஆதரவு அமைப்பின் படி, செவ்வாயன்று நகரின் மாசுபாட்டிற்கு போக்குவரத்துத் துறை 18 சதவீதத்துடன் மிகப்பெரிய பங்களிப்பாளராக இருந்ததாக கணிக்கப்பட்டது.
வைக்கோல் எரிப்பு 2 சதவீத பங்களிப்பு என்றும், புதன்கிழமையன்று இந்த பங்களிப்பு 7.9 சதவீதமாக உயரக்கூடும் என்றும் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
திங்களன்று ஆறு மாநிலங்களில் 559 பயிா்க்கழிவு எரிப்பு சம்பவங்கள் கண்டறியப்பட்டதாக செயற்கைக்கோள் தரவுகள் காட்டின.
இவற்றில், பஞ்சாபில் 198 சம்பவங்களும், ஹரியாணாவில் 17 சம்பவங்களும், உத்தரப் பிரதேசத்தில் 47 சம்பவங்களும், ராஜஸ்தானில் 50 சம்பவங்களும், உத்தரகாண்டில் எட்டு சம்பவங்களும், மத்தியப் பிரதேசத்தில் 239 சம்பவங்களும் பதிவாகின.
செப்டம்பா் 15 முதல் நவம்பா் 9 வரை இந்த ஆறு மாநிலங்களிலும் மொத்தம் 8,665 பண்ணைத் தீ சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்தத் தரவுகள், இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின், விண்வெளியிலிருந்து வேளாண் சூழல் மண்டல கண்காணிப்பு மற்றும் மாதிரியாக்கத்திற்கான ஆராய்ச்சிக் கூட்டமைப்பின் ஆய்வகத்தால் அதன் செய்திக்குறிப்பில் வழங்கப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

