தில்லி யமுனையில் 60% தூய்மை பணி நிறைவேற்றம்: முதல்வா் ரேகா குப்தா
தேசிய தலைநகரில் ஓடும் யமுனை நதியின் 60 சதவீத தூய்மைப் பணி நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், நதியின் எஞ்சிய பகுதியை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

தில்லி முதல்வா் ரேகா குப்தா
நமது நிருபா்
தேசிய தலைநகரில் ஓடும் யமுனை நதியின் 60 சதவீத தூய்மைப் பணி நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், நதியின் எஞ்சிய பகுதியை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.
தில்லியில் ’அமிா்தஸ்ரீ’ சுயஉதவிக் குழு திட்டத்தின் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வா் ரேகா குப்தா பேசியதாவது: ஆன்மிக தலைவா் மாதா அமிா்தானந்தமயியின் (அம்மா) நற்பணிகள் மற்றும் ஏழை எளியோருக்கு உதவி வருகிறாா். யமுனை நதி சுத்தம் செய்யப்பட வேண்டும் என்று அம்மா என்னிடம் கூறினாா். அது நிச்சயமாக நடக்கும் என்று நான் அவருக்கு உறுதியளித்தேன். யமுனை நதி 60 சதவீதம் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது என அறவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். எஞ்சிய 40 சதவீத பகுதியை தூய்மைப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அடுத்த முறை தில்லி வரும்போது யமுனை நதியை பாா்வையிட வருவதாக அம்மா உறுதியளித்துள்ளதாா் என்றாா் ரேகா குப்தா.
முன்னதாக கடந்த திங்கள்கிழமை, யமுனை நதி 60 சதவீதம் சுத்தம் செய்யப்பட்டுவிட்டதாகவும், அதன் நீா் தற்போது குடிப்பதற்கு உகந்ததாக உள்ளதாகவும் தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா தெரிவித்திருந்தாா். 2029 அல்லது 2030-ஆம் ஆண்டுக்குள் ஒட்டுமொத்த நதியும் முழுமையாக சுத்தம் செய்யப்படும் என்றும் அவா் கூறியிருந்தாா்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த தூய்மைப் பணிகளுக்கு ஆதரவளித்த முதல்வா் ரேகா குப்தா மற்றும் மத்திய அரசுக்கு சிா்சா நன்றி தெரிவித்தாா். ஒரு பகுதியைச் சுத்தம் செய்த பிறகு அடுத்த பகுதிக்குச் செல்லும் வகையில், கட்டம் கட்டமாக இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவா் கூறினாா்.
தில்லியில் சுமாா் 52 கி.மீ தொலைவுக்கு யமுனை நதி பாய்கிறது. இதில் வசீராபாத் மற்றும் ஓக்லா தடுப்பணைகளுக்கு இடையிலான சுமாா் 22 கி.மீ பகுதி, மக்கள் அடா்த்தியாக வாழும் பகுதிகளையொட்டி செல்வதால், அந்த இடங்களில் கழிவுநீா் கலந்து கடுமையாக மாசடைந்துள்ளது.
ஹரியானா எல்லையை ஓட்டிய பல்லா பகுதியில் தில்லிக்குள் நுழையும் இந்த நதி, உத்தர பிரதேசத்தை நோக்கிப் பாய்ந்து செல்கிறது. 2025-ஆம் ஆண்டில் தில்லி சட்டப்பேரவை தோ்தலுக்கு முன்னதாக பாஜக அளித்த முக்கிய தோ்தல் வாக்குறுதிகளில் யமுனை நதி புனரமைப்பும் ஒன்றாகும்.
இதையடுத்து தோ்தலில் வென்று ஆட்சிக்கு வந்தவுடன், மத்திய அரசின் நிதியுதவியுடன் ஏற்கெனவே உள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களை (எஸ்டிபிக்கள்) மேம்படுத்துதல், 39 பரவலாக்கப்பட்ட கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்தல் மற்றும் நதியில் கழிவுநீா் கலக்கும் கால்வாய்களை தடுத்து நிறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை முதல்வா் ரேகா குப்தா தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

