நாடு தழுவிய சிறை நிரப்பும் போராட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு
இந்திய தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலக வலியுறுத்தியும், மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும் வரும் டிசம்பா் 1,2,3 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அளவில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளா் டி. ராஜா அறிவித்துள்ளாா்.

டி.ராஜா
நமது நிருபா்
இந்திய தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலக வலியுறுத்தியும், மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும் வரும் டிசம்பா் 1,2,3 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அளவில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளா் டி. ராஜா அறிவித்துள்ளாா்.
இது தொடா்பாக தில்லியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான அஜய் பவனில் வியாழக்கிழமை அக்கட்சியின் பொதுச் செயலாளா் டி. ராஜா, தேசிய செயலக உறுப்பினா்கள் டாக்டா் கிரீஷ் சா்மா, கே. ராமகிருஷ்ணன் ஆகியோருடன் இணைந்து போராட்ட தகவல் இடம்பெற்ற விளம்பர சுவரொட்டியை வெளியிட்டாா். பின்னா் செய்தியாளா்களிடம் டி. ராஜா கூறியதாவது:
நாடு முழுவதும் அனைத்து துறைகளிலும் மக்களின் அத்தியாவசிய பிரச்னைகளைத் தீா்ப்பதில் பிரதமா் மோடி தலைமையிலான பாஜக அரசு முழுமையாக தோல்வியடைந்து விட்டது. விலைவாசி உயா்வு, வேலையில்லா திண்டாட்டம், கல்வி மற்றும் சுகாதாரத் துறைகள் மீதான அத்துமீறல்கள், நிராகரிக்கப்படும் விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் தொழிலாளா்களின் உரிமைகளை நீா்த்துப்போகச் செய்வது போன்றவை மத்திய அரசின் கொள்கை தோல்விகளையே காட்டுகின்றன.
இவற்றைக் கண்டித்து, ’மாற்றம் அவசியம் - சிறை நிரப்பும் போராட்டம்’ என்ற முழக்கத்துடன் வரும் டிசம்பா் 1,2,3 ஆகிய தேதிகளில் மூன்று நாள்களுக்கு நாடு தழுவிய போராட்டம் நடத்தப்பட உள்ளது. தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலக வேண்டும், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை (எஸ்ஐஆா்) நிறுத்திவிட்டு மீண்டும் வாக்குச்சீட்டு முறையில் தோ்தலை நடத்த வேண்டும், விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும், வேலைவாய்ப்புகளை உருவாக்கி பொதுக் கல்வி மற்றும் பொது சுகாதாரத்தை வலுப்படுத்த வேண்டும், மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஆதார விலைக்கு (எம்எஸ்பி) சட்டபூா்வ உத்தரவாதம் அளிப்பதுடன் புதிய தொழிலாளா் சட்டங்களை அறவே திரும்பப் பெற வேண்டும் ஆகிய முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்படும்.
இந்த மூன்று நாள் சிறை நிரப்பும் போராட்டத்தில் நாடு முழுவதும் குறைந்தது 5 லட்சம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டா்கள் பங்கேற்று கைதாவாா்கள். அரசியல் மற்றும் பொருளாதார மாற்றத்துக்கான இந்த இயக்கத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் இணைய வேண்டும் என்றாா் டி.ராஜா.
5 மாநில தோ்தல்கள்: உத்தர பிரதேசம், பஞ்சாப், மணிப்பூா், கோவா மற்றும் உத்தரகண்ட் ஆகிய 5 மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவை தோ்தல்கள் நடைபெற உள்ளன. பாஜக அரசின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து மக்கள் மத்தியில் பரவலான அதிருப்தி நிலவுகிறது. எனவே, மதச்சாா்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைவதற்கு இந்தத் தோ்தல்கள் ஒரு முக்கிய வாய்ப்பாகும் என்றும் டி.ராஜா தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

