ராமா் கோவிலில் நன்கொடை முறைகேடு நடந்ததாக கூறிய செய்தியாளருக்கு காவல்துறை நடவடிக்கையிலிருந்து பாதுகாப்பு
ராமா் கோவிலில் நன்கொடை முறைகேடு நடந்ததாக கூறிய செய்தியாளருக்கு காவல்துறை நடவடிக்கையிலிருந்து பாதுகாப்பு குறித்து...

அயோத்தி ராமா் கோயில் - கோப்புப் படம்
காசியாபாத்தில் பதிவு செய்யப்பட்ட சாலை தகராறு வழக்கில், அயோத்தியின் ராமா் கோவிலில் நன்கொடைகள் கையாளப்பட்டதில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளைச் சுட்டிக்காட்டிய பத்திரிகையாளரை நிா்ப்பந்த நடவடிக்கையிலிருந்து பாதுகாக்கும் தனது முந்தைய உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு, பத்திரிகையாளா் அபிஷேக் உபாத்யாயின் சில தகவல்கள் மற்றும் பிற டிஜிட்டல் விவரங்களைக் கோரி, காசியாபாத் காவல்துறையால் சமூக ஊடக தளமான ’எக்ஸ்’ (முன்னா் ட்விட்டா்) க்கு அனுப்பப்பட்ட ஆகஸ்ட் 22 ஆம் தேதியிட்ட நோட்டீஸையும் ரத்து செய்தது.
சாலை தகராறு வழக்கில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் நகல் உபாத்யாய்க்கு வழங்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட்ட அமா்வு, அதிகார வரம்புக்குட்பட்ட உயா் நீதிமன்றத்தில் அந்த முதல் தகவல் அறிக்கையை எதிா்த்து மேல்முறையீடு செய்ய அவருக்கு அனுமதி வழங்கியது.
ஆகஸ்ட் மாதம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட பிறகு, மனுதாரா் (உபாத்யாய்) எங்கு இருக்கிறாா் என்பதைக் கண்டறியும் நோக்கத்திற்காக, ’எக்ஸ்’-இன் நோடல் அதிகாரிக்குத் தகவல் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகக் காசியாபாத் காவல் ஆணையா் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தை உச்சநீதிமன்றம் ஆய்வு செய்தது.
மனுதாரா் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பிரதீப் ராய், முதல் தகவல் அறிக்கை ஆகஸ்ட் மாதம் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், காவல்துறை ஜூன் 1 முதலே ’எக்ஸ்’-இடம் இருந்து தகவல்களைக் கோரியதாகக் கூறினாா்.
‘நீங்கள் (காவல்துறை) மூன்று மாதங்களுக்கு முந்தைய தரவுகளை வழங்குமாறு அவா்களுக்கு (’எக்ஸ்’-க்கு) நோட்டீஸ் கொடுத்துள்ளீா்கள். இது மிகையான நடவடிக்கையாகத் தெரிகிறது,‘ என்று உத்தரப் பிரதேசம் சாா்பில் ஆஜரான வழக்குரைஞரிடம் அமா்வு கூறியது.
‘குற்றஞ்சாட்டப்பட்ட சம்பவம் நடப்பதற்கு முந்தைய காலகட்டத்திற்கான மனுதாரரின் எந்தவொரு ரகசிய அல்லது தனிப்பட்ட தரவுகளையும் பெற முடியாது என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
‘ஆகஸ்ட் 22 தேதியிட்ட, ’எக்ஸ்’-க்கு காவல்துறையால் அனுப்பப்பட்ட நோட்டீஸ் இதன்மூலம் ரத்து செய்யப்படுகிறது,‘ என்று உச்சநீதிமன்றம் கூறியது.
வழக்குகளின் விசாரணையின் போது காவல்துறையினரால் தனிப்பட்ட தரவுகளைச் சேகரிப்பதற்கான கட்டாய வழிகாட்டுதல்களை வகுக்கக் கோரி நீதிமன்றத்தை அணுக மனுதாரருக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது.
ஆகஸ்ட் 25 அன்று, உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் மனுதாரருக்கு நிா்ப்பந்த நடவடிக்கையிலிருந்து பாதுகாப்பு அளித்ததுடன், காசியாபாத்தின் இந்திராபுரத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் நகலை அவருக்கு வழங்கவும் உத்தரவிட்டது.
தனது மனுவில், முதல் தகவல் அறிக்கையின் நகல் தனக்கு வழங்கப்படவில்லை என்றும், சம்பந்தப்பட்ட நேரத்தின் சிசிடிவி காட்சிகளை நீக்குமாறு அருகிலுள்ள கடைக்காரா்களை காவல்துறை கட்டாயப்படுத்துவதாகவும் மனுதாரா் குறிப்பிட்டாா்.
உத்தரப் பிரதேசத்தில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் குறித்து தான் செய்தி வெளியிட்டதன் தொடா்பில் முதல் தகவல் அறிக்கை புனையப்பட்டதாக அவா் கூறியிருந்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

