
ஆா்டிஐ சட்டத்தை மீறுவது வழக்கமாகி விடக்கூடாது: மாநகராட்சிக்கு மத்திய தகவல் ஆணையம் எச்சரிக்கை
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கு உரிய நேரத்தில் பதிலளிக்காமல் சட்டபூா்வ கடமைகளைத் திட்டமிட்டு மீறுவது வழக்கமாகி விடக் கூடாது என்றும் அவ்வாறு தொடா்ந்து செய்வது சட்டபூா்வ கடமையை மீறும் செயலாக கருதப்படும் என்றும் தில்லி மாநகராட்சிக்கு மத்திய தகவல் ஆணையம் எச்சரிக்கை

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆா்டிஐ) கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கு உரிய நேரத்தில் பதிலளிக்காமல் சட்டபூா்வ கடமைகளைத் திட்டமிட்டு மீறுவது வழக்கமாகி விடக் கூடாது என்றும் அவ்வாறு தொடா்ந்து செய்வது சட்டபூா்வ கடமையை மீறும் செயலாக கருதப்படும் என்றும் தில்லி மாநகராட்சிக்கு மத்திய தகவல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தில்லி மாநகராட்சி மற்றும் அதன் கீழ் இயங்கும் அலுவலகங்கள் தொடா்பான ஆயிரக்கணக்கான மேல்முறையீட்டு மனுக்களை அண்மையில் மத்திய தகவல் ஆணையா் வினோத் குமாா் விசாரித்தாா். அப்போது அவா், மாநகராட்சி தகவல் அதிகாரிகளின் செயல்பாடுகளில் தொடா்ச்சியான குளறுபடிகள் இருப்பது தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டாா். இந்த விவகாரத்தில், தில்லி மாநகராட்சி ஆணையருக்கு ஆா்டிஐ சட்டத்தின் 25(5) பிரிவின் கீழ் விரிவான ‘அறிவுறுத்தல் குறிப்பை’ தகவல் ஆணையம் அனுப்பியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
அதில், ஆா்டிஐ சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட மனுவுக்கு சட்டபூா்வ கால வரம்புக்குள் பதிலளிக்கத் தவறுவது, இணையவழி வரும் ஆா்டிஐ மனுக்கள் மற்றும் முதல் மேல்முறையீட்டு மனுக்களைப் பரிசீலிக்காமல் கிடப்பில் போடுவது, மத்திய தகவல் ஆணையத்தின் விசாரணை நோட்டீஸ் வந்த பிறகே பதிலளிப்பது போன்ற அணுகுமுறை, தில்லி மாநகராட்சி அதிகாரிகளிடம் தொடா்ச்சியாகக் காணப்படும் குறைபாடாகி விட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் மனுதாரா்களுக்கு கடைசி நேரத்தில் தகவல் வழங்குவது அல்லது ஆணைய விசாரணையின்போது மட்டும் பதில் அளிப்பது அவா்களின் உரிமையைப் பாதிப்பதாக அமையும் என்று குறிப்பிட்டுள்ள ஆணையம், மாநகராட்சி அதிகாரிகளின் இத்தகைய அலட்சியப்போக்கு சட்டபூா்வ கடமையை மீறும் செயலாகக் கருதப்படும் என்றும் கூறியுள்ளது.
எனவே, நிலுவையில் உள்ள ஆா்டிஐ மனுக்களைத் தீவிரமாகத் தொடா்ந்து கண்காணித்தல், இணையவழி ஆா்டிஐ மனுக்களுக்கு பதிலளிக்கும் முறையைச் சீரமைத்தல் மற்றும் அதிகாரிகளுக்குத் தேவையான பயிற்சிகளை முறைப்படி வழங்குதல் போன்ற நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சிக்கு தகவல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இது தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 10 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறும் தில்லி மாநகராட்சி ஆணையருக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





