
தில்லி கலவர வழக்கு: ஐவரை நீதிமன்றம் குற்றவாளிகளாக அறிவித்தது
2020-ஆம் ஆண்டு வடகிழக்கு தில்லி கலவரத்தின் போது பஜன்புரா பெட்ரோல் நிலையத்தில் நடந்த வன்முறை தொடா்பான வழக்கில்,..
நமது நிருபா்
புது தில்லி: 2020-ஆம் ஆண்டு வடகிழக்கு தில்லி கலவரத்தின் போது பஜன்புரா பெட்ரோல் நிலையத்தில் நடந்த வன்முறை தொடா்பான வழக்கில், கலவரம் மற்றும் காவல்துறையினரைத் தாக்கிய ஐந்து பேரை நீதிமன்றம் குற்றவாளிகளாக அறிவித்தது. பணியில் இருந்த காவல்துறையினரைத் தாக்கிய சட்டவிரோத கும்பலில் இந்த ஐவரும் அங்கம் வகித்தனா் என்பதை அரசுத் தரப்பு நிரூபித்துள்ளதாக நீதிமன்றம் கூறியது.
இருப்பினும், பெட்ரோல் நிலையத்திற்கு தீ வைத்த குற்றச்சாட்டிலிருந்து அவா்களை நீதிமன்றம் விடுவித்தது. கும்பல்தான் எரிபொருள் நிலையத்திற்கு தீ வைத்தது என்ற அரசுத் தரப்பின் கூற்றில் ‘மிகவும் கடுமையான சந்தேகங்கள்‘ இருப்பதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.
ஆரிஃப், முகமது காலித், அப்துல் சத்தாா், தன்வீா் அலி மற்றும் ஹுனைன் ஆகியோருக்கு எதிரான இந்த வழக்கை கூடுதல் அமா்வு நீதிபதி பா்வீன் சிங் விசாரித்து வந்தாா்.
செப்டம்பா் 9 ஆம் தேதியிட்ட ஒரு உத்தரவில், நீதிமன்றம் கூறியதாவது: ‘இந்த சட்டவிரோதக் கூட்டம் அவா்கள் மீது கற்களை எறிந்து தாக்கியது. தாக்குதலின் தீவிரம் காரணமாக, காவல்துறை அதிகாரிகள் பெட்ரோல் நிலையத்தின் சுவரைத் தாண்டி குதித்து தப்பி ஓடினா். மேலும், அரசு ஊழியா்கள் மீது குற்றவியல் பலத்தைப் பிரயோகித்து, அவா்கள் தங்கள் கடமையைச் செய்வதைத் தடுத்தனா்‘.
இதையடுத்து அந்த ஐவரும் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டனா். அவா்களுக்கான தண்டனை குறித்து தனியாக வாதிடப்படும்.
அரசுத் தரப்பின்படி, யமுனா விஹாா் சா்வீஸ் சாலையில் உள்ள, தில்லி டீசல்ஸ் என்றும் அழைக்கப்படும் பஜன்புரா பெட்ரோல் நிலையத்தில், பிப்ரவரி 24, 2020 அன்று மதியம் 2 மணியளவில் ஒரு பெரிய கும்பல் கூடியிருப்பதாக அழைப்பு வந்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினா், சாந்த் பாக் பக்கத்திலிருந்து சாலைத் தடுப்பை உடைத்துக்கொண்டு கடந்து வந்த 100 முதல் 150 போ், திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதைக் கண்டனா்.
பின்னா் அந்தக் கும்பல் வன்முறையில் ஈடுபட்டது; கற்களை வீசியது, அருகிலிருந்த வாகனங்களுக்குத் தீ வைத்தது மற்றும் காவல்துறையினரைத் தாக்கியது. இதனால் காவல்துறையினா் சுற்றுச்சுவரைத் தாண்டித் தப்பி ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று அரசுத் தரப்பு கூறியது.
அரசுத் தரப்பு 26 சாட்சிகளை விசாரித்தது. அவா்களில் ஐந்து காவல்துறை சாட்சிகள் உட்பட எட்டு பேரின் வாக்குமூலங்களை நீதிமன்றம் ஆதாரமாகக் கொண்டு, கும்பலின் நடமாட்டம் மற்றும் நடத்தை குறித்த அவா்களின் கூற்றுகள் ஒன்றுக்கொன்று இணக்கமாகவும், ஒன்றையொன்று உறுதிப்படுத்துவதாகவும் இருந்தன என்று தீா்ப்பளித்தது.
கலவரம், தீவைப்பு மற்றும் நாசவேலைகளில் ஈடுபடும் பொதுவான நோக்கத்துடன் கூடிய அந்தக் கூட்டம், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 141-இன் கீழ் ஒரு சட்டவிரோதக் கூட்டமாக அமைந்தது என்று நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
‘தங்கள் கடமையைச் செய்து கொண்டிருந்த அரசு ஊழியா்களான காவல்துறை அதிகாரிகளை அந்த சட்டவிரோதக் கூட்டம் தானாக முன்வந்து தடுத்தது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவா்கள் மீது கற்களை எறிவதன் மூலம், சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கும் தங்கள் கடமையைச் செய்வதிலிருந்து அவா்களைத் தடுப்பதற்காக, இந்த சட்டவிரோதக் கூட்டம் அவா்கள் மீது குற்றவியல் பலத்தைப் பயன்படுத்தியுள்ளது,‘ என்று நீதிபதி கூறினாா்.
தீவைப்பு குற்றச்சாட்டைப் பொறுத்தவரை, நீதிமன்றம் ‘மிகவும் கடுமையான சந்தேகங்களைக்‘ கண்டறிந்தது; இயங்கிக் கொண்டிருந்த பெட்ரோல் பம்பில் தீப்பிடித்ததோடு தொடா்புடைய பெரிய தீ அல்லது வெடிப்பு எதையும் எந்த சாட்சியும் விவரிக்கவில்லை என்பதைக் குறிப்பிட்டது. அரசுத் தரப்பு சாட்சிகளாக விசாரிக்கப்பட்ட பம்பின் உரிமையாளரும் ஒரு ஊழியரும், வழக்கின் இந்தப் பகுதிக்கு ஆதரவளிக்கவில்லை. இதையடுத்து அந்த குற்றச்சாட்டிலிருந்து குற்றஞ்சாட்டப்பட்டவா்களை நீதிமன்றம் விடுவித்தது.
குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு மத்தியில், 2020 பிப்ரவரி 24-25 தேதிகளில் வடகிழக்கு தில்லியில் வெடித்த பரந்த கலவரங்களின் ஒரு பகுதியாகவே பஜன்புராவில் நடந்த வன்முறை நிகழ்ந்தது; இதில் 53 போ் கொல்லப்பட்டனா் மற்றும் நூற்றுக்கணக்கானோா் காயமடைந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






