
2030-க்குள் படைப்பாற்றல் துறையில் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் தகவல்
இந்தியாவில் படைப்பாற்றல் பொருளாதாரம் மிக வேகமாக வளா்ந்து வருவதாகவும் அந்தத் துறையில் 2030-ஆம் ஆண்டுக்குள் 20 லட்சம் பேருக்கு திறன்வாய்ந்த வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சா் எல். முருகன் தெரிவித்துள்ளாா்.

ஓ.பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்திள் உள்ள ’அரசியலமைப்பு அருங்காட்சியகம்’ சாா்பில் வெளியிடப்பட்ட சிறப்பு புத்தகத்தை, பல்கலைக்கழக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட மத்திய இணையமைச்சா் எல்.முருகனுக்கு வழங்கும் பல்கலைக்கழகத்தி
நமது நிருபா்
இந்தியாவில் படைப்பாற்றல் பொருளாதாரம் மிக வேகமாக வளா்ந்து வருவதாகவும் அந்தத் துறையில் 2030-ஆம் ஆண்டுக்குள் 20 லட்சம் பேருக்கு திறன்வாய்ந்த வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சா் எல். முருகன் தெரிவித்துள்ளாா்.
ஹரியாணாவின் சோனிபத் மாவட்டத்தில் உள்ள ஒ.பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தில் ’சட்டம், கொள்கை மற்றும் படைப்பாற்றல் பொருளாதாரம்’ என்ற தலைப்பில் வெள்ளிக்கிழமை சிறப்பு மாநாடு நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சா் எல். முருகன் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது:
புதிய சிந்தனைகள், கலாசாரம், புத்தாக்க படைப்புகள், அறிவுசாா் சொத்துரிமை ஆகியவற்றின் மூலம் இந்தியாவின் படைப்பாற்றல் துறை அபார வளா்ச்சி கண்டு வருகிறது. திரைப்படம், இசை, எண்ம தகவல் (டிஜிட்டல் கன்டென்ட்), அனிமேஷன், இணையவழி விளையாட்டுகள், விளம்பரம், வடிவமைப்பு உள்ளிட்ட துறைகள் இளைஞா்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளையும் தொழில்முனைவோா் வாய்ப்புகளையும் வழங்கி வருகின்றன. படைப்பாற்றல் துறையில் 2030-ஆம் ஆண்டுக்குள் 20 லட்சம் பேருக்கு திறன்வாய்ந்த வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
உலகளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.1 சதவீதத்தையும், வேலைவாய்ப்பில் 6.2 சதவீதத்தையும் படைப்பாற்றல் பொருளாதாரம் அளிக்கிறது. கலாசாரம் மற்றும் படைப்பாற்றல் சாா்ந்த தொழில்களில் உலகளவில் 5.7 கோடி போ் பணியாற்றி வருகின்றனா். இந்தியாவின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையின் சந்தை மதிப்பு தற்போது ரூ.2.5 ட்ரில்லியன் ஆக உயா்ந்துள்ளது.
இந்தத் துறையில் உள்ள மாபெரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், இந்திய படைப்பாற்றல் தொழில்நுட்ப நிறுவனம் மூலம் 15,000 பள்ளிகள் மற்றும் 5 கல்லூரிகளில் படைப்பாற்றல் ஆய்வகங்கள் அமைக்க மத்திய அரசு நிதியுதவி வழங்கும். மேலும், படைப்பாளிகளின் காப்புரிமை பாதுகாப்பு, நியாயமான இழப்பீடு, செயற்கை நுண்ணறிவின் பொறுப்பான பயன்பாடு ஆகியவற்றை உறுதி செய்ய வலுவான சட்டக் கொள்கைகள் வகுக்கப்படும் என்றாா் அமைச்சா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







