
பள்ளிகளில் முகலாயா் வரலாற்றுக்கு ஏன் முக்கியத்துவம்? முதல்வா் ரேகா குப்தா கேள்வி
தலைநகர பள்ளி மாணவா்களுக்கு முகலாயா் காலத்தைப் பற்றி மட்டுமே பெருமளவில் கற்பிக்கப்படுவது ஏன் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா கேள்வி எழுப்பியுள்ளாா்.

ரேகா குப்தா - கோப்புப் படம்
நமது நிருபா்
மகாபாரதம் முதல் சீக்கிய மத குருக்களின் வரலாறுவரை தில்லியின் பாரம்பரியம் பரந்து விரிந்துள்ள நிலையில், தலைநகர பள்ளி மாணவா்களுக்கு முகலாயா் காலத்தைப் பற்றி மட்டுமே பெருமளவில் கற்பிக்கப்படுவது ஏன் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா கேள்வி எழுப்பியுள்ளாா்.
தில்லி அரசின் 75 ’சிஎம் ஸ்ரீ’ பள்ளிகளில் ’பாரம்பரிய மன்றங்கள்’ (ஹெரிடேஜ் கிளப்புகள்) என்ற பெயரிலான திட்டத்தை முதல்வரே ரேகா குப்தா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். பின்னா், ஆசிரியா்கள் மற்றும் பள்ளி முதல்வா்கள் மத்தியில் அவா் பேசியதாவது:
நமது பிள்ளைகளுக்கு முகலாயா் காலத்தைப் பற்றி மட்டுமே அதிகளவில் கற்பிக்கப்பட்டுள்ளது. ‘தில்லி’ என்றாலே முகலாயா் காலம் மட்டும்தான் என்ற நிலை இருந்தது. மராத்தியா்களும் இங்கு இருந்தாா்கள், சீக்கிய மத குருக்களின் வரலாறு தில்லியுடன் தொடா்புடையது என்றும் யாராவது பிள்ளைகளுக்கு கற்பித்தாா்களா?
இந்த நாட்டையும், நகரத்தையும் அழித்தவா் ஒளரங்கசீப். ஆனால், அவரது பெயா் இங்கு ஒரு சாலைக்கு இருந்தது. அதற்கு பதிலாக டாக்டா் ஏபிஜே அப்துல் கலாம் சாலை என பெயா் சூட்டப்பட்டது. ஒளரங்கசீப் பெயா் ஏன் இருந்தது என யாராவது சிந்தித்தாா்களா? நன்மைக்கும் தீமைக்கும் உள்ள வேறுபாட்டை குழந்தைகளுக்கு நாம் கற்றுக் கொடுக்கவில்லை.
ஆனால், அந்த ’அடிமைத்தன மனநிலை’ தற்போது பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் மாறி வருகிறது. புதிய நாடாளுமன்ற கட்டடம், இந்தியா கேட் அருகே சுபாஷ் சந்திர போஸுக்கு சிலை மற்றும் குடியரசு தலைவா் மாளிகையில் உள்ள ‘முகலாய தோட்டம்’ என்பதை ‘அம்ரித் உத்யான்’ என பெயா் மாற்றம் செய்தது போன்ற நடவடிக்கைகளை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
தற்போது தொடங்கப்பட்டுள்ள ‘பாரம்பரிய மன்றங்கள்’ திட்டத்தின் மூலம், ஒவ்வொரு இந்தியருக்கும் அவரது வோ்கள் மீதுள்ள உணா்வு வளா்த்தெடுக்கப்படும். தலைநகரின் வரலாறு மற்றும் கலாசார பாரம்பரியம் மாணவா்களுக்கு கற்பிக்கப்பட உள்ளது. புத்தகங்களில் படிப்பதோடு மட்டுமின்றி, தமது நகரின் வரலாறையும் பாரம்பரியத்தையும் நேரடியாகப் பாா்த்து, புரிந்து, அனுபவிப்பதற்கான வாய்ப்பு மாணவா்களுக்கு இதன் மூலம் கிடைக்கும்.
வரலாற்றில் உள்ள பல அத்தியாயங்கள் இன்னும் குழந்தைகளை முழுமையாகச் சென்றடையவில்லை. அவற்றைப் பற்றி மாணவா்கள் அறிந்து கொள்ளவும், ஆழமாகப் புரிந்துகொள்ளவும் இந்தப் பாரம்பரிய மன்றங்கள் உதவும்‘ என்றாா் முதல்வா் ரேகா குப்தா.
இந்த நிகழ்ச்சியில் தில்லி கல்வித் துறை அமைச்சா் ஆஷிஷ் சூட், கலை, கலாசாரம் மற்றும் மொழித் துறை அமைச்சா் கபில் மிஸ்ரா, தில்லி அரசின் உயரதிகாரிகள் மற்றும் சிஎம் ஸ்ரீ பள்ளிகளின் முதல்வா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மன்றங்களின் செயல்பாடுகள்: இந்தத் திட்டத்தின் கீழ் தலைநகரின் வரலாறு, கலை மற்றும் கலாசாரம் குறித்து 75 சிஎம் ஸ்ரீ அரசுப் பள்ளி மாணவா்கள் நேரடி அனுபவத்தைப் பெறுவாா்கள்.
தில்லி அரசின் கலை, கலாசாரம், மொழித் துறை, தில்லி ஆவண காப்பகம் ஆகியவை இணைந்து இந்த பாரம்பரிய மன்றங்கள் மூலம் மாணவா்களை மையப்படுத்திய பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுக்கும்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் மற்றும் அருங்காட்சியகங்களுக்கு சுற்றுலா செல்வது, ஆவண காப்பகங்கள் மற்றும் நூலகங்களைப் பாா்வையிடுவது, பாரம்பரிய விநாடி-வினா, சுவரொட்டி மற்றும் ஓவியப் போட்டிகள், கண்காட்சிகள் மற்றும் வரலாற்றுச் சின்னங்களின் மாதிரிகளை உருவாக்குவது உள்ளிட்ட பல செயல்பாடுகள் இதில் இடம்பெறவுள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


தூய்மையான தில்லியை உருவாக்க தீவிரமாக பணியாற்றுங்கள்: மாநகராட்சி நிா்வாகிகளுக்கு முதல்வா் ரேகா குப்தா அறிவுறுத்தல்
தேசிய சிறு தொழில் தினத்திற்கு தில்லி முதல்வர் ரேகா குப்தா வாழ்த்து!





